திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதை அமைக்கப்பட்டு நூறு ஆண்டுகள், நிறைவடைந்ததை ஒட்டி நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கிலேய ஆட்சி காலத்தில் திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் பாதை வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆறுமுகநேரி பிரம்மமுத்து நாடார் குடும்பத்தைச் சேர்ந்த எஸ். பி. பொன்னையா நாடார். பொன்னையா நாடார் 1883 ஆம் ஆண்டு காயல்பட்டினம் உப்பு வர்த்தக கம்பெனியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கொப்புளங்களில் இருந்து உப்பும் மற்றொரு பிரதான உற்பத்தி பொருட்களான கருப்பட்டியும் வெளியூர்களுக்கு வண்டிகள் மூலம் அனுப்பப்பட்டு வந்ததால் பொருள் நஷ்டமும் கால விரையமும் ஏற்பட்டுள்ளது. இக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி புறையூர் பங்களாவில் முகாமிட்டிருந்த ஜில்லா கலெக்டர் பக்கீல் துறையிடம் ரயில்வே சம்பந்தமான முதல் மனுவை சமர்ப்பித்தார்.
அதில் திருச்செந்தூர் பாதையின் முக்கியத்துவம் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய வியாபார விருத்தியையும் மக்களுக்கான வசதிகள் குறித்து ஆதாரத்துடன் விளக்கினார்.
1923 இல் புதிய பாதை துவக்கம் :-
இதையடுத்து 1904 ஆம் ஆண்டு ட்ராபிக் சர்வேயும் பிரதம லைன் சர்வையும் நடந்துள்ளது. 1914 ஆம் ஆண்டு இப்பாதைக்கு நாள் வேலை செய்து பூமி பூஜைகள் செய்யப்பட்டது. பணிகள் முடிந்து 23.02.1923 ம் தேதி, சென்னை கவர்னர் கோஷன் பிரபுவால் இப்பாதை திறக்கப்பட்டது.
2023ல் மின்மயமாக்கல் :-
கடந்த 1923 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் பாதை இன்று அகல ரயில் பாதையாகவும் மின்சார ரயில் வந்து செல்லும் வகையில் மின்பாதையாகவும் ரயில்வே ஸ்டேஷன்கள் நவீனமயமாகவும் பல்வேறு வளர்ச்சியடைந்து, தென் மாவட்டங்களில் முக்கிய இருப்புப் பாதையில் ஒன்றாக லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றாட தேவைக்கும் அத்தியாவசிய பணிக்கும் தேவையான ரயில்வே பாதையாக வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆனால் இந்த ரயில் பாதை 100 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வருவதற்கு, பாடுப்பட்ட பலத்தலைவர்கள் இன்று நினைவுக் கூறத்தக்கவர்கள், அவர்களை மத்திய மாநில அரசு தேர்ந்தெடுத்து அவர்களை நினைவு கூறும் வகையில் ரயில்வே பாதையில் சிறப்பு செய்யவும் பாடுபட்ட தலைவர்களின் வாரிசுகளை கௌரவிக்கவும் வேண்டும் திருச்செந்தூர் ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷன்களில் அவர்களின் சிலைகள் வைக்கப்பட வேண்டும்.
நாசரேத் வழியாக ரயில் இயக்குவதற்கு காரணமாக இருந்த அப்போதைய சேகரகுரு கானோனுக்கு நாசரேத் ரயில்வே ஸ்டேஷனில் சிலை வைக்க வேண்டும் என்பது தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் விருப்பமாகும்….


