தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் இன்று அதிகாலை தனது லோடு வேனில் தர்பூசணி பழங்களை ஏற்றிக்கொண்டு தட்டார்மடம் பல்க்கில் டீசல் நிரப்பி விட்டு பல்க்கை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் இருந்து கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு லோடு வேன் ஒன்று வேகமாக வந்தது. அதை செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்தார்.
இரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டது. இதில் இதில் இரண்டு வாகனமும் சாலையில் இரு பக்கமும் தூக்கி வீசப்பட்டு தலைகீழாக கிடந்தது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தர்பூசணி மற்றும் கறிக்கோழிகள் சாலை முழுவதும் சிதறி கிடந்தது. இந்த விபத்து சம்பவத்தில் தர்பூசணி ஏற்றி வந்த ஜோசப் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு தட்டார்மடம் காவல் துறையினர் வந்தனர். விபத்தில் காயமடைந்த ஓட்டுநர்கள் இருவரையும் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


