திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சாலை போடும் பணி மிக மந்தமாக நடைபெற்று வருகிறது. செய்துங்கநல்லூர் சந்தை , யூனியன் அலுவலகம், கருவேலங்குளம் அருகில் பாலம் கட்டி சாலை போடும் பணி கடந்த ஒரு வருட காலமாக நடந்து வந்தது. இதற்கிடையில் கொட்டும் மழையில் தற்போது சாலை போடும் பணியை துவங்கியுள்ளார்கள் நெடுஞ்சாலை துறையினர். முதல் கட்டமாக கருவேலங்குளம் அருகிலும், யூனியன் அலுவலகம் அருகிலும் தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது செய்துங்கநல்லூர் அல் உமர் புதிய குடியிருப்பை சேர்ந்த 25 க்கும்மேற்பட்ட பெண்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை வேலையை மறியல் செய்வதற்காக கிளம்பிவந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து இந்த பகுதியை சேர்ந்த அப்துல் கூறும் போது , “சாலை போடுகிறோம் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு வரும் தண்ணீர் இணைப்பை துண்டித்து விட்டார்கள். தற்போது சாலை பணியை முடிக்க வந்துள்ளனர். எங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் இணைப்பை கொடுத்த பிறகே சாலை பணியை முடிக்க விடுவோம்” என்று கூறினார்.

இதற்கிடையில் விட்டிலாபுரம் பஞ்சாயத்து தலைவர் பசுபதி இந்த மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின் ஒப்பந்தகாரர்களை அழைத்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். வருகிற சனிக்கிழமைக்குள் துண்டிக்கப்பட்ட பைப் லைன்னை இணைத்து தரும் படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தபின்பு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் சாலைபோடும் பணி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11 மணி வரை சாலை போட்டு முடிக்கப்பட்டது. இன்று காலை சந்தை அருகில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இது குறித்து அப்துல் கூறும் போது செய்துங்கநல்லூரில் நெடுஞ்சாலை துறை சாக்கடை வறுகால் அமைக்கும் பணி, கழிவறை அமைக்கும் பணி மற்றும் பஸ் நின்று செல்லவதற்கான வேலை அனைத்தும் கிடப்பில் கிடக்கிறது. இந்த பணி முழுவதும் நடந்து முடிந்தால் செய்துங்கநல்லூர் அழகான அடிப்படை வசதி கொண்ட நகராக மாறி விடும். திருநெல்வேலி மாவட்டம் வரை வேகமாக நடந்த பணி, தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் பல இன்னலுக்குள் ஆகிறார்கள். எனவே விரைவாக பணியை நடத்தி முடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
செய்துங்கநல்லூரில் ஒரு வழியாக சாலை போட்டு விட்டார்கள் என்றாலும் கூட வாறுகால் பணி , பஸ் நிலையம் அமைக்கும் பணி கண்காணிப்பு கமரா பொறுத்தும் பணி, கழிவறை அமைக்கும் பணி விரைவாக துவங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


