பல தலைமுறைகளாக வீட்டில் தாய்மொழியும், வெளியில் அந்தந்த இட மொழியும், பேசி வாழும், தெலுங்கர்களின் யுக்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு பதிவை நேற்று போட்டிருந்தேன்.
பலர் பலவிதமான பின்னூட்டமிட்டு இருந்தார்கள். பலர் நகைப்பு உணர்வை வெளிப்படுத்தி இருந்தார்கள். இதில் நகைப்பதற்கும், கோபப்படுவதற்கும் அவசியம் என்ன? என்று தெரியவில்லை.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா சென்ற தமிழர்கள் தமிழை முழுவதும் மறந்து விட்டார்கள். சிங்கப்பூர் மலேசியா கர்நாடகா போன்ற இடத்தில் தமிழை சற்று கலப்போடு காப்பாற்றி வருகிறார்கள்.
தமிழ் பேசும் நிலப்பகுதிகள் அல்லாமல், பிற மொழி பேசும் இடத்தில் வாழும், தமிழர்களின் இந்தத் தலைமுறை பிள்ளைகளிடம், தமிழ் நிலைக்கவில்லை. தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் முழுவதும் படித்து முடித்த அடுத்த தலைமுறை பிள்ளைகள். தமிழில் பேசத் தயங்குகிறார்கள், தடுமாறுகிறார்கள்.
சொற்கள் தெரியும் ஆனால் அதைப் பயன்படுத்தத் தெரியாது. பொதுவாக எழுதுவது, பேசுவது போன்றவற்றை அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலே புழங்குகிறார்கள். இது கசப்பாக இருந்தாலும் அதுவே உண்மை! வேதனை!
தெலுங்கர்கள் எப்படி மொழியைக் கடத்தினார்கள் என்று பெரிதும் யோசிக்க வேண்டாம். காரணம் அதனை இன்று நீங்கள் கணக்கெடுத்தால், இதுவரை காப்பாற்றப்பட்டு வந்த வீட்டு தாய்மொழி, அவர்கள் தலைமுறைகளிடமும் இல்லாமல் போயிருக்கும்.
இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால்
நூறு வருடம் முன்பு, பிள்ளைகள் வெளியில் ஒரு மொழி பேசுவார்கள், வீட்டுக்கு வரும்போது வீட்டில் தாய் மொழி பேசுவார்கள்.
ஆனால் இன்று அப்படி இல்லை. பிள்ளைகளிடம் யாரும் பேசுவதில்லை. ”சாப்பிடவா” ”படி” ”தூங்கு” என்று சொற்ப சொற்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள். மற்றபடி இந்தப் பிள்ளைகள் தாங்கள் விரும்பும் மொழிகள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பார்க்கிறார்கள்.
பொதுவாக வீட்டு மொழி என்ற இடத்தில் ஆங்கிலம் வந்துவிடுகிறது. ஆகையால் வெளியில் ஒரு மொழியும் வீட்டில் ஆங்கிலமும் அல்லது அதே வெளிமொழியும் வந்துவிடுகிறது. தாய்மொழி கொஞ்சம்தெரிந்த மொழியாகச் சுருங்கி விடுகிறது.
இது இந்தத் தலைமுறையின் கதை. அடுத்த தலைமுறை அந்தச் சொற்ப சொற்களைக் கூடத் தன் பிள்ளைகளிடம் பேசமாட்டார்கள். ஆகையால் கண்டிப்பாக எந்த வீட்டு மொழியும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வாய்ப்பே இல்லை.
பிள்ளைகளைத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, படங்களைப் பார்க்கத் தூண்ட வேண்டும். தமிழ் பாடல்களைக் கேட்க வைக்க வேண்டும். பாடல்களை வரிகளோடு பழக்க வேண்டும். அதன் பொருளைப் புரிந்து கொள்ள வைக்க வேண்டும். தமிழ் பிள்ளைகளைக் குழுவாக இணைக்க வேண்டும். அவர்களுக்குள் தமிழில் பேசிப் பழக வாய்ப்பு அளிக்க வேண்டும். குடும்ப உறவினர்களிடம் நிறைய தொலைபேசி தொடர்பு வைத்திருக்க வேண்டும். இப்படி பல செயல்பாடுகளைச் செய்தால். அடுத்த தலைமுறைக்குத் தமிழ் உட்பட எந்த வீட்டு மொழியும் தாண்டும்.
இது உண்மையா இல்லையா என்பதனை அறிய, உங்கள் பிள்ளைகளின் கனவில் பேசும் மொழி அல்லது சிந்திக்கும் மொழி, என்ன என்று கேளுங்கள், அது எதுவாக இருந்தாலும் அதுதான் அவர்களின் மொழி.
பேச்சு மொழியாக நிலைக்க வைக்க இதுவரை நம்மிடம் ஏதும் திட்டம் இல்லை என்பது கசப்பான உண்மை. தமிழை வெறும் பாட மொழியாக மட்டுமல்லாமல், பேச்சு மொழியாக உருவாக்க வேண்டியது நமது கடமை.


