தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வேண்டி செக்காரக்குடியில் பொடும்பாவி உருவ பொம்மை பாடைகட்டி ஒப்பாரி வைத்தல் திருவிழா நடைபெற்றது.
தமிழ்நாடு போன்ற வறண்ட வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மக்கள், குறிப்பாக உழவர்கள் மழை வேண்டிப் பல சடங்குகளைச் செய்கின்றனர். மழைச் செம்புஎடுத்தல், மழைக்கஞ்சி காய்ச்சுதல், கொடும்பாவி கட்டி எரித்தல், ஒப்பாரி வைத்தல், கழுதைகளுக்கு மணம் செய்து வைத்தல் போன்ற சடங்குகளை செய்து வருகின்றனா். இந்த சடங்குகளை செய்யும் பழக்கம் இன்றும் ஒரு சில சமூகத்தினரிடையே இருந்து வருகிறது.
இந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் இன்றும் அந்த பழக்கத்தை விவசாயிகள் செய்து வருகின்றனர். செக்காரக்குடி கிராமம் இராணுவ கிராமம் எனும் சிறப்பை பெற்ற அழகிய கிராமம் ஆகும். இந்த ஊரில் உள்ளவா்கள் அதிகமானோர் இராணுவத்தில பணியாற்றிக்கொண்டிருக்கின்றனா். செக்காரக்குடி கிராமம் மானாவாரி மழையை நம்பி விவசாயம் செய்து வரும் மிகப்பெரிய கிராமம். இங்கு ஆண்டு தோறும் பெய்யும் பருவ மழையை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா். பருவ மழை பொய்க்கும் போது ஒரு உருவத்தை வைக்கோல் மற்றும் செடிகளால் செய்து, அதற்கு சட்டை அணிவித்து, பாடை கட்டி, அதை பருவ மழைக்கு தடையாக இருக்கும் கொடும்பாவி எனும் மூதேவியாக பாவித்து, சாவு மேளம், தாளம், குறத்தி ஆட்டம் போன்றவைகளை நடத்தி அனைத்து தெருக்கள் வழியாக வந்து துடைப்பான் மற்றும் செருப்பால் அடித்து, ஒப்பாரி பாடல் பாடி , கொடும்பாவியை எரித்து அந்த சாம்பலை எடுத்து விவசாய நிலங்களில் போடுவதால், தாமதமான பருவமழை உடனே பெய்யும் என்பது இவ்வூா் மக்களின் நம்பிக்கை.
இந்த கொடும்பாவி எனும் பாடைகட்டி ஒப்பாரி வைக்கும் திருவிழா இன்று(26-11-2022) செக்காரக்குடி கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஊா்பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனா். இந்த விழா செக்காரக்குடி ஊராட்சிமன்ற தலைவா் ராமலெட்சுமி ஐயம்பெருமாள், வெற்றிவேல், வேல்முருகன,சுப்பையா, ஐஸ்மாரியப்பன், முருகன், ஆதிமூலம், ராமசாமி, நமச்சிவாயம் மற்றும் பலர் முன்னிலையில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் இதில் கலந்து கொண்டனா்.
இந்த விழாவில் கலந்து கொண்ட மக்கள் மழை வேண்டி
” மானத்து ராசாவே…..
மழை பெய்யும் புண்ணியரே….
சோழத்து மக்கள்லெல்லாம் சோத்துக்கு வாடுகிறோம்……
ஆதிமூல பெருமாளே ….
அருள்புரிய வேண்டுமய்யா……
பாண்டிய மக்களெல்லாம் பசியோடு வாடுகிறோம்…..
மாரியம்மன் தாயாரே…. மானத்த காக்க வேண்டுகிறோம்…..
என பாடல் வரிகள் நீண்டு கொண்டே போகிறது.
இந்த திருவிழாவை அடுத்து இன்று மாலை செக்காரக்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைமேகங்கள் முகம் காட்டின…..
சிவகளை ஆ.மாணிக்கம்
சிவகளை தொல்லியல் கழகம்.


