கருங்குளம் அருகே உள்ள கிராமம் வல்லகுளம் பஞ்சாயத்து மல்லல் புதுக்குளம். இந்த கிராமத்தில் சுமார் 50க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் பஸ் ஏறுவதற்கும், சாலைக்கு வருவதற்கும் அரை கிலோ மீட்டர் நடந்து வரவேண்டும். இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் உள்ளது. ஆனால் இவ்விடத்துக்கு வரச் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை கடந்த 15 வருடத்துக்கு முன்பு கிராம பஞ்சாயத்து மூலமாக போடப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை அந்த இடத்தில் தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான இடம் என ஆக்கிரமித்துள்ளார். இதனால் கிராம மக்கள் கூட்டமாக வந்து வல்லகுளம் & மணல்விளை சாலையில் மறியல் செய்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்ற செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்பனாப பிள்ளை, சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி துரை சிங்கம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தலைமையில் இந்த இடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் உறுதி கூறினார். அதன்பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து இந்த ஊரைச்சேர்ந்த லெட்சுமணன் கூறும் போது, எங்கள் ஊரில் இருந்து வெளியே வரும் பாதையை எனக்கு விவரம் தெரிந்தே நாங்கள் இந்த வழியைதான் பயன்படுத்தி வருகிறேன். 15 வருடங்களுக்கு முன்பு வல்லகுளம் பஞ்சாயத்து சார்பில் எங்களுக்கு இந்த வழியாக சாலையும் அமைத்து தந்து விட்டார்கள். இந்த வழியாகத்தான் பள்ளி கூட குழந்தைகள் படிக்க பள்ளிக்கு வரவேண்டும். ஆனால் தற்போது இந்த சாலையை தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான பாதை என்று அடைக்கிறார். ஆகவே நாங்கள் நியாயம் கேட்டு தற்போது சாலை மறியல் செய்துள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்க ஆவண செய்வதாக காவல் துறை வாக்களித்துள்ளார்கள். ஆகவே கலைந்து செல்கிறோம். தொடர்ந்து சாலை வசதி கிடைக்காவிடில் நாங்கள் மேற்க்கொண்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
தீடீரென்று பொதுமக்கள் சாலை மறியலில் ஏற்பட்டதால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது


