ஆறாம்பண்ணையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
பாளையங்கோட்டை சதக்கதுல்லாஹ் அப்பா கல்லூரியின் சதக்கத் கிராம மேம்பாட்டு திட்டம் மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணையில் நடந்தது.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.
துணை முதல்வர் சையது முகம்மது காஜா, ஆறாம் பண்ணை பஞ்சாயத்து தலைவர் ஷேக் அப்துல் காதர், பள்ளி செயலாளர் அப்துல் கனி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
முகாமில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் மனோகரன் தலைமையில் உதவி பேராசிரியர் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் பல்வேறு நோய் கண்டறியும் சோதனைகள், மருத்துவ உதவிகள் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மர்மக் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்வதற்காக நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது.
ஆறாம் பண்ணை சுற்றுவட்டார கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
முகாம் ஒருங்கிணைப்பாளர் முகமது ரிஸ்வான், திட்ட மேலாளர் முகமது ராசிக், கல்லூரி கணிதத்துறை மாணவ மாணவிகள் மற்றும் ஆறாம்பண்ணை மக்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


