வருடம்தோறும் சித்திரை மாதம் பத்தாம் நாளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் நடைபெறும் ஒரு நிகழ்வு பொன்னேர் பூட்டுதல் ஆகும். அன்று ஊர் கோயில் நிலத்தில் அனைத்து வேளாண் மக்களும் தங்கள் ஏர் கொண்டு உழுவதே இந்நிகழ்ச்சியின் தலையாயது. சில பகுதியில் இதை நல்லேர் கட்டுதல் என்பர்.
அன்று அதிகாலையிலேயே வீடுகளை கழுவி,மாடுகளை குளிப்பாட்டி குளித்து கலப்பையை தோளில் சுமந்து எருதுகளை ஓட்டியபடி வயல்களை நோக்கி ஆண்கள் நடக்க அவர்களின் பின்னால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் பூஜை பொருட்கள், நவதானியங்கள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துச் செல்வர். கூடவே ஒரு கூடையில் மாட்டு எரு கொஞ்சமும் எடுத்துச் செல்வர்.
வயலில் மண்ணால் சிறு மேடை அமைத்து அதன் மேல் சாணம் அல்லது மஞ்சள் தூள் குழைத்து பிள்ளையார் செய்து, கொண்டுவந்திருக்கும் பொருட்களை அதன் முன் பரப்பி வைத்துவிட்டு, பஞ்சாங்கத்தின்படி அன்று எந்த திசை நல்ல திசையாக சொல்லப்பட்டிருக்கிறதோ அத்திசையை நோக்கி எருதுகளை நிற்க வைத்து ஏர் பூட்டி உழுவார்கள். குடும்ப உறுபினர்கள் அனைவரும் அன்று ஏர் ஓட்டுவார்கள்.
இது ஒரு சம்பிரதாய உழவு என்பதால் வயலின் சிறுபகுதியை மட்டும் உழவு செய்துவிட்டு எருதுகளை அவிழ்த்து விட்டு விடுவார்கள். பிறகு உழவு செய்த இடத்தில் எருவை கொட்டி அதன் மீது நவதானியங்களை விதைத்துவிட்டு, எருதுகள், கலப்பை, மண்வெட்டி ஆகியவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, அந்த வருடம் விளைச்சல் சிறப்பாய் இருக்க இறைவனை வேண்டி பூஜைகள் செய்து, இனிப்புக் கலந்த பச்சரிசியை பிரசாதமாக வழங்குவர்.
இந்த சித்திரை பத்து என்பது இன்றைய தமிழ் பூமியில் சூரியன் உச்சிக்கு வரும் நாள் என்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே இந்த நாளே புத்தாண்டின் தொடக்கமாக கொள்வதின் குறியீடாக இந்த நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. சில அம்மன் ஆலயங்களில் இந்த நாள் ‘பத்தாம் உதயம்’ என்ற பெயரில் சிறப்பு விழாவாக கொண்டாடப்படுவதும் உண்டு.
சில ஊர்களில் அங்குள்ள தச்சு ஆசாரியை அழைத்து ஊர்கோயிலில் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்து சன்மானம் வழங்கும் வழக்கமும் இருக்கிறது. உழவுக்கு வேண்டிய கருவிகளை செய்து கொடுப்பதால் அவருக்கு இந்த சிறப்பு மரியாதையாம்.
இந்தப் பொன்னேரு பூட்டல் சடங்கு சிந்து வெளியிலும் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்று என்று சொல்லப்படுகிறது. அது போல் கம்போடியாவிலும் சித்தரை மாதம் அங்குள்ள அரச பரம்பரையினர் தங்கத்தினால் ஆன ஏர் கொண்டு நிலத்தில் உழுது உழவை தொடங்கி வைப்பராம். பின்னர் உழவர்கள் தத்தம் வயலில் உழுவராம். இன்றும் அங்கு இது கடைபிடிக்கப்பட்டு வருகிறதாம்.


