தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 53 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன்பின்னர் இந்த கட்டிடம் சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை.
இந்த வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொறுத்தவரை வல்லநாடு சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். தினம்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கர்ப்பிணி பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் இந்த கட்டிடம் மிகவும் சிதலமைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. மேற்கூரை பூச்சு ஆங்காங்கே பெயர்ந்து விழுகிறது. தற்போது பெய்து வரும் சிறு சிறு மழைக்கு கூட ஆங்காங்கே நீரூற்று ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த கட்டிடம் இன்று பெயர்ந்து விழவா அல்லது நாளை பெயர்ந்து விழவா என்று கேட்கும் படி நிற்கிறது.
இதுகுறித்து நேதாஜி சுபாஷ் சேனை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் வசவப்பபுரம் கணேசன் கூறும்போது, கடந்த 53 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் மிகவும் பழுதான நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீரமைத்து புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டிடம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. எனவே உடனே இந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


