தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் குரு அலெக்சாண்டர். இவரது மனைவி பிரான்சிஸ் விண்ணரசி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சுமித் என்ற இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது.
பிரான்சிஸ் விண்ணரசி ஆழ்வார்திருநகரியில் உள்ள வேலன் காலனியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் சமயங்களில் இவரது கணவர் குரு அலெக்ஸாண்டர் தான் குழந்தையை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை பிரான்சிஸ் விண்ணரசி பள்ளிக்கு சென்றுள்ளார் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது. தனது கணவருக்கு போன் செய்து பார்த்தபோது சுவிட் ஆப்பில் இருந்துள்ளது. தொடர்ந்து சுமார் ஐந்து மணி அளவில் கணவர் குரு அலெக்சாண்டருக்கு போன் செய்துள்ளார். அப்போது பேசிய குரு அலெக்சாண்டர் தான் ஒரு பிரச்சனையில் மாட்டியுள்ளதாகவும், 25 பவுன் நகை கொண்டு வந்தால் தான் விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து உடனே பதறிய பிரான்சிஸ் விண்ணரசி ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் உடனே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மகன் சுமித் மட்டும் நாசரேத் அருகே ஒரு இடத்தில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனியாக நின்ற சுமித்தை போலீசார் மீட்டனர். மேலும் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக கொடுக்கல் வாங்கல் தகறாரில் இவர்கள் கடத்தப்பட்டதாக தகவல் தெரிந்துள்ளது.


