பாளை அரசு மருத்துவ மனையில் இதயவலிக்காக உள் நோயாளியாக சேர்ந்து குணமாகி விட்டேன். தக்க நேரத்தில் அரசு மருத்துவமனையில் சேருங்கள் என்று அறிவுருத்திய எங்கள் குடும்ப டாக்டர் சுரேஷ் அய்யா அவர்களுக்கும், டாக்டர் ஏஞ்சல் சுரேஷ் அவர்களுக்கும் முதல் நன்றி. அன்பு நண்பர்கள் செவிலியர்கள் மணிகண்டன், முத்துகுமார் ஆகியோர் நேரில் வந்து என்னை பார்த்து சக அலுவலர்களிடம் நான் எழுத்தாளர் என அறிமுகம் செய்து வைத்து, மருத்துவர்களிடமும் என்னை அறிமுக படுத்தி வைத்தனர். இதே வேளையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்தும் என்னை நன்றாக கவனிக்க சொல்லி தொலைப்பேசியில் தகவல் வந்தது . இதனால் சிகிச்சை மிக சிறப்பாக நடந்தது. கடந்த அக்டோபர் 9 ந்தேதி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தேன். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில்ராஜ் அய்யாவை நான் சந்திக்க சென்றபோது என்னை நன்றாக கவனித்த அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி கூறியதோடு, உங்களை எழுத்தாளர் நேரில் வந்து பார்ப்பார், தொடர்ந்து ஆவண செய்யுங்கள் என்று போனில் பேசினார் .நான் இன்று முதல்வரை பார்க்க வருகிறேன் என்ற தகவலை மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்கள் மோகன், பிரபு ஆகியோர் தெரிவித்தனர். பேரன் நாட்டார்குளம் எஸ்.கே.திருப்பதி உடன் வர, எங்களை ஆஸ்பத்திரி வாசலில் அழைத்து செல்ல நண்பர் செவிலியர் மணிகண்டன் வந்து நின்றார். முதல்வர் அலுவலகத்துக்குள் சென்றோம். என்னை பார்த்தவுடன் இன்முகத்தோடு எங்களை வரவேற்றார். அதோடு மட்டுமல்லாமல் முத்தாலங்குறிச்சி காமராசுவை நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. நீங்கள் தான் எங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றீர்கள் என்ற தகவல் எனக்கு தாமதமாகத்தான் கிடைத்தது. அதனால் உங்களை பார்க்க முடியவில்லை. என்னுடைய பூர்வீகம் முத்தாலங்குறிச்சித்தான். எனது தாத்தா அடிக்கடி முத்தாலங்குறிச்சி குறித்து பேசுவார் என்று கூறியவுடன் நான் சந்தோஷமடைந்தேன். எழுத்தாளர் என்றால் எவ்வளவு மரியாதை. நோயாளியாக நான் படுத்த பிறகு தான் தெரிந்தது. எனக்கு எத்தனை பாசமிகு நண்பர்கள் இருக்கிறார்கள். எத்தனை பேர் நான் வாழவேண்டும் என கோயிலில் பூஜை செய்தார்கள், ஜெபித்தார்கள், தொழுதார்கள். உண்மையிலேயே யாரையுமே மறக்க முடியாது. இரண்டு மாதங்கள் என்னை காண கனிகளோடு வந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன். இந்த இரண்டு மாதத்தில் பல துக்க வீடுகளுக்கும், திருமணம் உள்பட நல்ல காரியங்களுக்கும், நிறைய கூட்டங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிக்கும் செல்ல இயலவில்லை. அவர்கள் எல்லோரும் மன்னித்துவிடுங்கள். மீண்டும் ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் இது மருத்துவர்களின் ஆலோசனை . ஆனாலும் மெதுவாக கார் ஓட்டிவருகிறேன். பைக் ஓட்டி வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மக்களை சந்திக்கிறேன். எழுத ஆரம்பித்துள்ளேன். எனக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. தொடர்ந்து விட்ட இடத்தில் இருந்து என் வாழ்க்கையை துவங்க போகிறேன். அதற்கு உங்கள் ஆசியும், அன்பும் என்றென்றும் வேண்டும் -அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


