மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனைமர விதை நடும் பணி தீவிரம்
ஒரு கோடி பனை மர விதைகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதர் சமூக சேவை நிறுவனம் ஒரு கோடி பனை மர விதை நடும் இலக்கை ஏற்படுத்திக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் புயல், சூறாவளி, பூகம்பம், மண்ணரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், கடற்கரை, தீவு, பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால் கரை, ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் விருப்பப்பட்டு கேட்ட தனியாக இடங்களிலும் தன்னார்வமாக, சேவை மனப்பான்மையோடு, அரசிடம் எந்த நிதி உதவியும் பெறாமல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கமாக தூத்துக்குடி மாவட்டம் துவக்கிய 36-வது ஆண்டு துவக்க தினத்தன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் முன்னிலையில் ஒரே நாளில் காயல்பட்டினம் கடற்கரையில் 36 ஆயிரம் பனை மர விதைகள் விதைத்தனர். தற்போது வரை 70 லட்சத்தி 33ஆயிரத்தி 439 பனை மர விதைகளை விதைத்துள்ளனர்.
மேலும் ஒரு கோடி இலக்கை அடைதற்காக தொடர்ந்து பனை மர விதை விதைக்கும் பணியில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தினர் மிக தீவிரமாகவும் ஈடுபட்டு, செயல்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் மீண்டும் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் ஒரே நாளில் பத்தாயிரம் பனை மர விதை நடும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஏ ஆர் டி ராஜ்கமல் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர தலைவர் முத்துக்குமார், ஏரல் பகுதி தலைவர் சங்கர் கணேஷ், சமூக ஆர்வலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு ஒரே நாளில் 10 ஆயிரம் பனை மர விதை நடும்பணியை துவக்கி வைத்தார். இதில் பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்தனர். முன்னதாக பனையை வளர்ப்பதற்கும், பனையை பாதுகாப்பதற்குமான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். முடிவில் லீட் டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்


