வல்லநாடு முருகன் கோவில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
அதே போல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளி சார்பில் யாகசாலை பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது. ஆறாம் நாளான நேற்று வல்லநாடு வடக்கு பஜாரில் சூரசம்ஹாரம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சப்பர வீதி உலா நடந்தது.
கந்த சஷ்டி விழாவில் மற்றொரு முக்கிய நிகழ்வான சுவாமி அம்பாள் திருக்கல்யாண காட்சி வைபவம் இன்று கோவில் முன்பு நடந்தது. இதனைக் காண வல்லநாடு மற்றும் சுற்று கிராம மக்கள் திரளாகக் கூடினர். திருக்கல்யாண நிகழ்வில் மாலை மாற்று வைபவம் நடந்த போது முருக பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷ முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் சப்பரங்களின் வீதி உலா நடந்தது. இதனைக் கோவில் தலைமை அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் தலைமையில் அம்பை ஞானம் பட்டர், வெங்கடேச பட்டர், ஹரிஹர பட்டர் ஆகியோர் நடத்தினர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறப்பநாடு காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.


