தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு பள்ளி தாளாளர் கிருபாகரன் தலைமை வகித்தார். சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா, பேருராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 202 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் ஊர்வசி அமிர்தராஜ் பேசுகையில் இவ்வளவு நேரம் அமைதியாக ஒழுக்கமாக இருந்த இந்த மாணவச் செல்வங்களை சுற்றுலா அழைத்துச் செல்லவேண்டும்.
இன்றைய நாட்களில் பல பள்ளிகளில் சுற்றுலா அழைத்துச் செல்வது கிடையாது. சுற்றுலா செல்வதால் மாணவர்களிடையே நட்பு அதிகரிக்கும், மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆகவே கண்டிப்பாக மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவேண்டும். இது என்னுடைய கோரிக்கை அல்ல, வேண்டுகோள் என்று கூறினார்.


