தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும், ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமாக இருந்த 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


