தூத்துக்குடி மாவட்டம் உதயமான 36வது ஆண்டினை முன்னிட்டு சிறப்பு பாடலினைமாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தூத்துக்குடி மாவட்டம் உதயமான 36வது ஆண்டினையொட்டி முத்துநகர் குறித்து தயாரிக்கப்பட்ட சிறப்பு பாடலினை, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் வெளியிட்டார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் உதயமான 36வது ஆண்டினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொண்டு 40,669 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை ஆட்சியர் செந்தில்ராஜ், துவக்கி வைத்து தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம், 20.10.1986 அன்று உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் அலுவலக பணியாளர்களால் தூய்மைபடுத்தப் பட்டு, தோரணங்கள் மற்றும் வண்ண பலூன்கள் கட்டி அழகுபடுத்தப்பட்டும், அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் மரக்கன்றுகள் மற்றும் அலங்காரச் செடிகள் நடப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணியின் போது அனைத்து துறை அலுவலர்களும் விருப்பத்துடன் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனைத்து துறை சார்ந்த 5201 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் அலுவலகங்களை சுத்தம் செய்தும், 4669 மரக்கன்றுகள் நட்டனர்.
மேலும், காயல்பட்டிணம் கடற்கரையில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் 36,000 பனை விதைகள் நடப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை இயக்கம் சார்பில் 2023ம் ஆண்டுக்குள் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் நமது மாவட்டத்தில் 5 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. பனை மரங்களை அனுமதியின்றி வெட்டினால் காவல் துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிகழ்வினை மேலும் சிறப்பித்திட மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து 1069 மனுக்கள் பெறப்பட்டன. வரப்பெற்ற மனுக்கள் மீது இரண்டு வாரங்களில் தீர்வு கண்டு அதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, காயல்பட்டிணம் மதர் சமூக சேவை நிறுவனம் இயக்குனர் கென்னடி, நகர்மன்ற தலைவர் முத்துமுகமது, வட்டாட்சியர்கள் செல்வக்குமார் (தூத்துக்குடி), சுவாமிநாதன் (திருச்செந்தூர்), ஆணையர் குமார்சிங், வாவு வஜூரா வனிதையர் கல்லூரி நிறுவனர் செய்யது அப்துர் ரஹ்மான், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், வீரபாண்டிய பட்டிணம் ஊராட்சி தலைவர் எல்லமுத்து, அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


