நெல்லை – தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க 2004ம் ஆண்டு திட்டம் தீட்டப்படடது. இதற்காக 232 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கிடையில் பாதி பணி கூட நிறைவு பெறாத நிலையில் ஒப்பந்தக்காரர் தனக்கு பேசப்பட்ட தொகை கட்டுப்படியாகாததால் கடந்த 2007ல் ஆண்டு பணியை விட்டுச் சென்று விட்டார்.
பாதியில் பணி நிறுத்தப்பட்டது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற காரணத்தினால் பணியை தொடர முடியாத நிலை நீடித்தது. கடந்த 2010ஆம் ஆண்டு விடுப்பட்ட பணிகளுக்கு கூடுதல் திட்டம் தயாரிக்கப்பட்டு மீண்டும் கூடுதல் நிதி ஒதுக்கினர்.
இதையடுத்து சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக தொடங்கின. மொத்தம் 320 கோடியிலான புதிய திட்ட மதிப்பில் நடைபெற்று வந்த சாலைப்பணி விரைவாக நடந்தது. வல்லநாடு தாமிரபரணி ஆற்றைக் கடக்கும் 4 வழி பெரிய மேம்பாலம் அமைக்கப்பட்டது. சாலை பணிமுடிந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது.
இந்த பணி 5 வருடம் கூட நீடிக்கவில்லை. கடந்த 2017ம் வருடம் வருடம் நவம்பர் 16ந் தேதி இரவு வல்லநாட்டில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் திடிரென ஓட்டை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் இரவோடு இரவாக போக்குவரத்து மாற்றப்பட்டது. அதன்பின்னர் சுமார் 6 மாத காலத்திற்கு பின்னர் ஓட்டை அமைக்கும் பணியுடன் நெல்லை & தூத்துக்குடி செல்லும் இருவழிசாலை முழுவதும் தரமாக சீரமைக்கப்பட்டது.
அதன்பின்னர் தொடர்ந்து 6 முறை இந்த பாலத்தில் இரண்டு புறமும் மாற்றி மாற்றி ஓட்டைகள் விழுந்தது. தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினார்.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் இந்த பாலம் பழுது பார்ப்பதற்கு 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 வார காலமாக பாலப்பணிகள் தொடங்குவதற்காக செட் அமைக்கப்பட்டு பொருட்கள் வந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக பாலத்தின் அடிப்பகுதியில் பணிகளுக்காக கம்பு கட்டும் பணிகள் நடந்தது. இன்று பாலத்தின் அடிப்பகுதியில் அடிக்கப்பட்ட பெயிண்ட்களை அகற்றும் பணியில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த பணிகள் ஒரு வருட காலத்திற்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பாலப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கடந்த 2017ம் ஆண்டு பாலம் சீரமைக்கும் பணி நடந்தபோது பிளாஸ்டிக் ஷீட் மூலம் சீரமைக்கப்பட்டது. ஆனால் பாலம் மீண்டும் சேதமடைந்தது. தற்போது அதே பிளாஸ்டிக் ஷீட்கள் கொண்டு பாலம் சீரமைப்பதற்காக பணிகள் நடந்து வருகிறது. எனவே தற்போது அமைக்கப்பட உள்ள பாலம் தரமாக அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


