உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் நிலையில்
ஸ்ரீவைகுண்டம் – ஆதிச்சநல்லூர் இடையே தாமிரபரணி ஆற்றில் படகுகுழாம் அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நவத்திருப்பதி கோயில் மற்றும் நவக்கைலாயக் கோயில், குருசு கோயில், பள்ளிவாசல்கள், சி.எஸ்.ஐ ஆலயம் என மும்மதத்தினரும் வழிபடக் கூடிய புகழ்பெற்ற ஆன்மீக திருத்தலங்கள் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்று அணைப் பகுதியில் படகுகுழாம் அமைக்க வேண்டும் என சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுப் பணித்துறையினரின் முறையான பராமரிப்பு இன்றி தூர்ந்துபோய் இருந்த அணைப் பகுதியில் போதிய ஆழம் இல்லாததால் அப்பொழுது படகுகுழாம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக எஸ்.பி.சண்முகநாதான் இருந்த பொழுது அணையில் கூடுதலாக தண்ணீர் சேமிக்கும் விதமாக 2 அடி உயர்த்தப்பட்டு படகுகுழாம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
கடந்த 2015ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணி நடைபெற்றது.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு
அணைப் பகுதியில் படகுகுழாம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது.
இதனையடுத்து அப்போதைய ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் தலைமையிலான வருவாய் துறையினர் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைதற்றனர்.
இதன் ஒருபகுதியாக ஸ்ரீவைகுண்டம் அணையில் தேங்கியிருந்த அமலைச் செடிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டடன.
அணைக்கு கீழ் பகுதியில் புதுப்பாலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் ஆக்கிரமித்து இருந்த கரவேலமரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கலை பொது மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனையடுத்து, அப்போதை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், உதவி சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜன், போக்குவரத்து கோட்ட மேலாளர் சமூத்திரம் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில் படகுகுழாம் அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் அத்திட்டம் தாசில்தாரின் பணியிட மாற்றத்திற்கு பிறகு ஆரம்பகட்ட நிலையிலே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொழில் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை பார்வையிட பொதுமக்களும் வரலாற்று ஆர்வலர்களும் ஆர்வம் கொண்டுள்ளனர்.
இந்நிலையில்ஸ்ரீவைகுண்டம் – ஆதிச்சநல்லூர் இடையே தாமிரபரணி ஆற்றில் படகுகுழாம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமான ஶ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதுமில்லை.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ள சூழ்நிலையில் ஶ்ரீவைகுண்டத்தில் இருந்து படகுக்குளாம் ஆதிச்சநல்லூர் வரை சென்று வரும் வகையில் அமைத்தால் சாலை வழியாகவும் தாமிரபரணி ஆற்றில் படகு மூலமும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சென்று வருவார்கள்.
தமிழக அரசும் விரைந்து படகுகுளாம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


