தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை குளம் உள்ளது. இந்த குளம் 900 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த குளத்தின் மூலம் பாசனவசதி பெறுகின்றன. பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் புத்தன்தருவை குளம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மணல்மேடுகளும் கருவேல மரங்களும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறி விடுகிறது.
இதனால், கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு கூட குளத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை என்பதால் புத்தன்தருவை குளத்தை தூர்வாரிட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், ஶ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், புத்தன்தருவை ஊராட்சி மன்ற தலைவர் சுலைகா பீவி ஆகியோர் புத்தன்தருவை குளத்தை தூர்வார வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
இந்நிலையில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பத்மா, உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம் உள்ளிட்டோர் புத்தன்தருவை குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, குளத்தின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு, பதிலளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தினால் தண்ணீரை அதிக அளவில் தக்க வைத்துக் கொள்ள முடியும். கரைகள் அமைத்தால் மழைக்காலங்களில் கிராமங்களில் உள்ள தண்ணீர் வெளியேறாமல் தங்கிவிடும் கரைகள் அமைக்காமல் குளத்தை ஆழப்படுத்தினால் கரை உயரமாகி தண்ணீர் விவசாய நிலத்திற்கு செல்லாமல் தடுக்கமுடியும். அதற்காக அரசிடம் முறையாக அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.


