தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியால் அந்தப் பகுதி விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் நேரில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்குவாரிக்கு வாகனம் செல்வதற்காக அந்தப் பகுதியில் உள்ள தனிநபர் இடத்தில் சாலையும் அமைத்து உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்குவாரிக்கு செல்லக்கூடிய சாலையில் கற்களை போட்டு அப்பகுதி பெண்கள் சாலையில் கடப்பாரையால் குழிகளை தோண்டி மரக்கன்றுகளை அப்பகுதி பெண்கள் சாலையில் நட்டனர். மேலும் கல்குவாரிக்கு செல்லக்கூடிய வாகனத்தையும் சிறை பிடித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் வட்டாட்சியர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மூன்று நாட்களில் சமாதானக்கூட்டம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெறும். பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் கல்குவாரியில் சார்ந்த நபருடன் சுமூகமாக முடிவு எட்டப்படும் என்று தாசில்தார் கூறினார் இதனால் அப்பகுதி மக்கள் கலந்து சென்றனர்.


