
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு பிச்சனார்தோப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த முருகன், சக்திவேல், பேச்சுமுத்து ஆகியோரது 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் அதே பகுதியில் நிறுவப்பட்டிருந்த சமுதாய கொடியும் மர்மநபர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.


மேலும் அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதன் அருகில் உள்ள மேலகோட்டைவாசல் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த நல்லபெருமாள் என்ற ராஜா என்பவரது லோடு ஆட்டோ மற்றும் ராமர், கணேசன் ஆகியோரது 2 கார்களின் கண்ணாடிகளும் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தபோது கார் கண்ணாடிகள் உடைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் போலீசார் நேரில் விரைந்து வந்தனர்.

அங்கு வந்த போலீசார் உடைக்கப்பட்ட கார்கள் மற்றும் எரிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் நள்ளிரவில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, இருசக்கர வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


