தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன விவசாயிகளின் விவசாய பணிகளுக்காக மழைக்கு முன் கால்வாய்களை தூர்வார வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கோரிக்கை மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரம் ஏக்கர் தாமிரபரணி பாசன விவசாய நிலம் உள்ளது. அதில் கடந்த ஆண்டு மழைகாலத்தில் பெய்த கனமழையால் தண்ணீர் வடியாமல் விவசாயிகளும், விவசாய பயிர்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. இந்த வருடம் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக தாமிரபரணி பாசனமுள்ள பெரிய கால்வாய் முதல் கடைநிலை கால்வாய் வரை விவசாயிகளின் நலன் கருதி தூர்வாரிக் கொடுக்வேண்டும் என தூத்தக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அதிமுக சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறியுள்ளதாவது மருதூர் மேலக்கால், கீழக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பகுதியிலுள்ள பெரிய வாய்கால்கள் முதல் சிறிய கடைநிலை பாசன வாய்கால்கள் வரை விவசாயிகளின் நலன் கருதி மழைக்காலத்திற்கு முன்னதாக தூர்வாரி கொடுக்கும்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இதனால் தாமிரபரணி பாசனத்திலுள்ள 86ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயிகள் மழைகாலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காப்பாற்றப்படுவதோடு தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயநிலங்கள் அதிக விளைச்சல் ஏற்படும், மகசூல் அதிகரிக்கும், மழை நீரும் சிக்கனமாக சேமிக்கலாம் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை இதன் மூலம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளருடன் நேர்முக உதவியாளர்கள் பாலஜெயம், சாம்ராஜ் மற்றும் வட்ட செயலாளர் மனுவேல் ராஜ், முன்னாள் கவுன்சிலர் சந்தனபட்டு, சகாயராஜா, ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.


