தமிழகம் முழுவதும் இன்று அக்டோபர் 2ம் தேதி காந்தியின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
அதே போல் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள திருவேங்கிடபுரம் கிராம ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். இதில் மீன்வளம் மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அனைத்து துறையில் இருந்தும் கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. அதனை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் அறிக்கைகளை வாசித்தார். தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் பதில் அளித்தனர்.
அதன்பின்னர் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் ஒரு மாவட்டம் வளர்ச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி பெற முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் பேசினார்.
அதன்பின்னர் பல்வேறு துறையில் இருந்தும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கருங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


