பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை கண்டித்து செய்துங்கநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்தியா முழுவதும் கடந்த வாரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகத்தில் திடீரென சோதனை நடந்தது. இதில் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் 5 வருடங்களுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகள் தடை செய்ய உத்தரவிட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே செய்துங்கநல்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


