தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டு வருவதால் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து இருந்த நிலையில் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவர்கள் பயின்று வந்தனர். இதற்கிடையில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் மூலம் ரூ.13 இலட்சத்து 67 ஆயிரம் பங்களிப்புடன் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் இப்பள்ளியில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்தார். நாலுமாவடி புது வாழ்வு சங்கம், இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி.லாசரஸ் அடிக்கல் நாட்டினார். விழாவில், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் முன்னிலை வகித்தார். ஆதிநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துமாலை, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மன்றத் தலைவர் சாரதா பொன்இசக்கி, ஆழ்வார்திருநகரி சேகரகுரு அருமைத்துரை, தலைமையாசிரியை சித்ரா, ஆதிநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கரும்பன், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


