செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலையில் கருங்குளத்தில் இருந்து தெற்கு காரசேரி காட்டுப்பகுதி வரை கடந்த வருடம் சாலை சீரமைக்கப்பட்டது. அதே போல் சேரகுளத்தில் இருந்து வள்ளுவர் காலனி வரையும் சீரமைக்கப்பட்டது. ஆனால் இதற்கிடையில் உள்ள 5 கிலோ மீட்டர் தூரம் சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
இதற்கிடையில் கடந்த ஜுலை மாதம் 14ம் தேதி இந்த சாலையை புதுப்பிப்பிதற்கான பணிகள் தொடங்கியது. இதற்காக 2.13 கோடி மதிப்பில் இதற்கான பணிகள் தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாட்களில் இருந்தே பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில் கடந்த ஒரு வார காலமாக சாலையில் உள்ள குழிகளை செப்பணிட்டு பணிகள் மீண்டும் தொடங்கியது.
தற்போது சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தெற்கு காரசேரி காட்டுப்பகுதியில் இருந்து வள்ளுவர்காலனி வரை சாலைப்பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை வள்ளுவர் காலனி பகுதியில் வாகனம் மூலம் தார்ச்சாலை விரிக்கப்பட்டது. இந்த தார்ஜல்லிகளை கொண்டு வருவதற்காக அதன்பின்னர் லாரிகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அப்போது சாலை அமைக்கும் வாகனத்திற்கு பின்னால் வந்த லாரி வள்ளுவர் காலனியில் உள்ள போடப்பட்டிருந்த சாலையில் பக்கவாட்டில் இறங்கியது. இதில் சாலை சேதமானது. ஆனால் சாலைப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களோ அரசு அதிகாரிகளோ அதனை கண்டுகொள்ளாமல் அடுத்த இடத்திற்கு சாலைகளை அமைப்பதற்காக சென்று விட்டனர். இதனால் இந்த சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
தொடர்ந்து ஒரு நாள் மழை பெய்தால் கூட இந்த சாலை அந்த இடம் கரைந்து ஓடி விடும். எனவே இந்த சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


