சிங்கிகுளம் சமண மலையில் பத்தாம் நூற்றாண்டு செம்புக் காசுகள் கிடைத்துள்ளன. நெல்லைமாவட்டம் சிங்கிகுளம் சமணமலை மிகவும் பழமையான தமிழர்களின் வாழ்வியல்களை உள்ளடக்கியதாக உள்ளது நெல்லை மாவட்டத்தின் பழமையான பெரிய சமண தலமான இங்கு பழங்கால சமணர்களின் படுக்கைகள், பாவிகள், குகைகள் நீர்ச்சுனைகள், 13ம் நூற்றாண்டின் பாண்டியர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள் என ஏராளமான வரலாற்று எச்சங்களை கொண்டுள்ளது.
மலையின் பழம் பெருமை குறித்து கடந்த மாதம் ‘நம்ம ஊரு வரலாறு’ பகுதியில் தினகரன் நாளிதழ் “சைவம் சமணத்தின் அடையாளம் சிங்கிகுளம் மலை கோவில்” எனும் தலைப்பில் பழந்தமிழர் வரலாறு மற்றும் பண்பாட்டுகளை விளக்கும் கட்டுரையை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில்திருநெல்வேலி தொல்லியல் கழகம் என்ற அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஹரிபிரதன், கணேசன், கண்ணன் ஆசிரியர் அடங்கிய குழுவினர் சிங்கிகுளம் சமண மலையில் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்குள்ள பாறை சரிவுகளுக்கிடையே 10-ம் நுாற்றாண்டின் இராஜராஜசோழன் காலத்தைச் சார்ந்த செம்பாலான நாகரி எழுத்துடன் கூடிய 8 ஈழக்காசுகள் மற்றும் 13 ம் நுாற்றண்டைச் சேர்ந்த பெரிய செங்கலும் கிடைத்துள்ளன.
ஈழப் போர் மூலம் இலங்கையை, முதலாம் இராஜராஜசோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் பொன், வெள்ளி, செம்பு உலோகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. அக்காசுகள் முதலாம் இராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவை பொதுமக்களால் செம்பாலான ஈழக்காசு, ஈழக்கருங்காசு என அழைக்கப்பட்டுள்ளது. சிங்கிகுளம் சமணமலையில் கண்டெடுத்த 8 செம்பாலான ஈழக் கருங்காசுகள் ஆகும். இந்த ஈழக்காசுகள் சுமார் 3 முதல் 5 கிராம் வரை எடை இருக்கும். கி.பி1000-1100 வருடத்தைச்சேர்ந்தது என கருதப்படும் இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் ”ராஜ ராஜ” என்று நாகிரியில் எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடித்த இவை சோழர்களின் மற்றும் பாண்டியர்களின் ஆளுகையின் கீழ் மாறி மாறி இருந்து வந்ததால் பாண்டிய நாட்டு மக்கள் புழக்கத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 13-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த 22க்கு 15-ல் பெரியசெங்கல் ஒன்றும் இக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செம்புக் காசுகளை தொல்லியல் ஆய்வுக் குழுவினர் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் ஒப்படைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இக்குழுவினருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


