வல்லநாடு சிவன் கோவிலில் திருவாசக முற்றோதுதல் விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆவுடைஅம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 85 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று வல்லநாடு ஊர்ப்பொதுமக்களின் பிரார்த்தனையாகத் திருவாசக முற்றோதுதல் விழா இன்று கோவிலில் நடந்தது.
இதில் குறிச்சி பலவேசம் குழுவினர் மற்றும் வல்லநாடு திலகவதியார் திருவடியார்களுடன் ஏராளமான சிவனடியார்களும் திரளாகக் கலந்து கொண்டு திருவாசகப் பதிகங்களை மனமுருகப்பாடினர்.
முன்னதாக சுவாமி, அம்பாள் மற்றும் நடராஜபெருமானுக்குக் கோவில் தலைமை அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் தலைமையில் அரகர சிவனே போற்றி என்ற பக்தி கோஷங்கள் முழங்க சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. வல்லநாடு திருமூலநாதர் பக்தர் பேரவையினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


