தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் நான்கு வழிச்சாலைப் பகுதியில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி கார் ஒன்று இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் வேகமாக வந்தது. இதனை வி.எம்.சத்திரம் பவுல்நகரைச் சேர்ந்த பால்துரை மகன் வினோத் என்பவர் ஓட்டி வந்தார். தெய்வச்செயல்புரத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் மாடு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மாட்டின் மீது கார் மோதாமல் இருப்பதற்காக வினோத் காரை நிறுத்தியபோது பின்னால் வந்த திருநெல்வேலி பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் முருகேசன் ஓட்டி வந்த கார் மோதியது.

அதனை தொடர்ந்து அதற்கு பின்னால் வந்த தூத்துக்குடி 3ம் மைல் திருவிக நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் வேல்முருகன் என்பவரது ஆம்னி வேன் மோதியது. தொடர்ந்து மூன்று வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாது. இதில் மூன்று வாகனங்களில் முன்பக்கமும் மிகுந்த சேதடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


