தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்றத்தில் 7வது வார்டு உறுப்பினராக பணியாற்றி வந்தவர் பட்டுராஜா. இவர் திமுக கருங்குளம் ஒன்றிய நெசவாளர் அணிபிரிவிலும், செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தக சங்கத்திலும் உள்ளார். இவர் சேர் டேபிள் வாடகைக்கு விடும் பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி நம்பியம்மாள் என்ற மனைவியும், சதீஷ்(11) என்ற மகனும், சுருதி(8) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் பட்டுராஜா திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவருடன் வி.கோவில்பத்தைச் சேர்ந்த சந்தனம் மகன் அந்தோணிகுமார் என்பவரும் சென்றுள்ளார்.
அப்போது இவர்களுக்கு முன்னால் மின்கம்பம் ஏற்றி ஒரு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அந்த டிராக்டரை முந்த முயற்சித்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பட்டுராஜா உயிரிழந்தார். அந்தோணிகுமார் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பட்டுராஜா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அந்தோணிகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


