தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்றைய தினம் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம் சார்பில் 150 வது ஆண்டு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தாமிரபரணி நதி பற்றிய விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதிய வகைக்கு “தாமிரபரணி ஆராய்ச்சி சேவை”க்கான விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு விருதை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊர்வசி அமிர்தராஜ், ஒட்டப்பிடாரம் சண்முகையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், முன்னாள் சேர்மன் உமரி சங்கர், வழக்கறிஞர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தலைவர் குணசேகரன், செயலாளர் ஜெயபொன்ராஜ், பொருளாளர் கார்த்திகேயன் மலர்குழு தலைவர் நல்லாசிரியர் ஞானராஜ் உள்பட சங்க உறுப்பினர்களும் மலர் குழுவினரும் செய்திருந்தனர்.


