தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நிரந்தர புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடும்படி ஆணையிட்டிருந்தார். மேலும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூறி போற்றிடும் வகையிலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இளைய தலைமுறையினர் அறிந்திடும் வகையில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த அலங்கார ஊர்தியினை மாவட்டந்தோறும் அனுப்பி வைத்தார்கள்.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை தந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இளம் தலைமுறையினருக்கும், பொதுமக்களுக்கும் சுதந்திர போராட்ட உணர்வினையும், நாட்டு பற்றினையும் ஏற்படுத்தியது. மேலும் வ.உ.சி.ன் 150வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும்விதமாகவும் அன்னாரை போற்றிடும் விதமாகவும் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் நடமாடும் புகைப்படக்கண்காட்சியினை அனுப்பி வைத்தார்கள்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அறியப்படாத மொழிப்போர் தியாகிகள் போன்றவர்களின் பெயர்கள் அவர்களின் புகைப்படம், தோற்றம், மறைவு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆண்டு, ஈடுபட்ட போராட்டங்கள், சிறை சென்ற ஆண்டுகள், சிறைகளின் பெயர், வாரிசுகளின் பெயர் போன்ற குறிப்புகளை எடுத்து நிரந்தர புகைப்படக் கண்காட்சி வைக்க தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்கள்.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மக்களால் அறியப்படாத 25 சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள், தமிழறிஞர்கள் ஆகியோரின் புகைப்படத்துடன் கூடிய வாழ்க்கை வரலாறு அடங்கிய நிரந்தர புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலையில் இன்று (16.08.2022) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்வலெட்சுஷ்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.


