நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் உள்ள கோயில்களில் 75ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கோயில்கள் கட்டிடக்கலை பற்றிய கள ஆய்வு இரண்டு நாள்களாக நடந்தது.
மத்திய தொல்லியல் துறை மற்றும் நெல்லை அருங்காட்சியகம் இணைந்து நடத்திய தொல்லியல் சார்பில் கள ஆய்வு நடந்தது.
பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் நடந்த துவக்க விழாவில் அருங்காட்சியக காப்பாட்சியம் சிவ சத்தியவள்ளி வரவேற்றார். தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் குமரன், ஓய்வுபெற்ற முதுநிலை தொல்லியல் ஆய்வாளர் சேரன், தொல்லியல் ஆய்வாளர் செந்தி நடராஜன், துணை பேராசிரியர் மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற முதுநிலை தொல்லியல் அலுவலர் வெங்கிடாசலம் ஆகியோர் பேசினர். மத்திய தொல்லியல் துறை துணை தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா நன்றி கூறினார்.
அதன்பின் கிருஷ்ணாபுரம் சிற்பக்கலை குறித்து மாணவ மாணவிகளுக்கு கருத்து பட்டறை நடந்தது. ஓய்வுபெற்ற முதுநிலை தொல்லியல் ஆய்வாளர் வெங்கடாசலம் விளக்கம் அளித்தார். அதன்பின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் உள்ள தங்கம் கிடைத்த இடத்தினை மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். துணை தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா அறிமுக உரையாற்றினார். சென்னை பல்கலைகழக ஓய்வு பெற்ற முதுநிலை தொல்லியல் ஆய்வாளர் சேரன் விளக்கம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக ஆர்வலர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள கோயிலில் பயிற்சி பட்டறை நடந்தது. இதிலும் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை அருங்காட்சியகம் மற்றும் மத்திய தொல்லியல் துறையினர் இணைந்து நடத்தினர்.


