முன்கதை சுருக்கம்
கிராமத்தில் வாழ்ந்த முத்துகிளி செல்போன் தொடர்பில் வீட்டுக்கு தெரியாமல் வயதான தம்பதியினருடன் மும்பை சென்று விடுகிறாள். அவளை நவீன போன் தொடர்பு வசதியுடன் கண்டு பிடிக்கிறான் நவீன். வயதான தம்பதிகளிடம் இருந்து முத்துகிளியை காப்பாற்றும் போது போலிசுக்கும் அவர்களுக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடக்கிறது. போலிசில் மாட்டிக்கொண்ட தம்பதிகள் கொரோனா நோயில் இறந்து விடவே, உடன் இருந்த முத்துகிளி உள்பட தேடிச்சென்ற உறவினர்கள் கொரோனா முகாமில் வைக்கப்படுகிறார்கள். அதன் பின் போலிஸ் கமிஷனர் உதவியுடன் இரண்டு காரில் ஈபாஸ் மூலமாக தமிழகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி திருமணம் செய்தது என்கிறார் வாசு. அதை பற்றி புரியாமல் தவித்தார் இளங்கோ. உண்மையை புரிந்து கொள்ள சந்திரன் தனது பூர்வீகத்தினை தேடுகிறான். அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கிடையில் பனையில் இருந்து விழுந்து இறந்த லிங்க நாடாருக்கு ஏதாவது அரசு மூலம் நிதி உதவி கிடைக்குமா? அவன் சென்ற இடமெல்லாம் தோல்வியே ஏற்பட்டது. இதற்கிடையில் பழை ய பொருள்களை சேகரிக்கும் காளிமுத்து என்ற பெரியவரை சந்திரன் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. இதில் 1999&இல் பனையேறி ஒருவர் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் ஒன்றை அறிய வாய்ப்பு ஏற்பட்டது. இனி.
45.குடிசையோடு எரிந்த பனையேறி குடும்பம்
பழைய பொருள் மீது மிக பைத்தியமாகவே பேசினார் காளிமுத்து. “நேத்து ஒரு பழைய பெட்ரோமாஸ் லைட்டு கிடைச்சதுனு வாங்கிட்டு வந்தேன், எந்த பழைய பொருள் கிடைச்சாலும் அத முன்னமாதிரி ஒக்கிடலாமானு நானே ரெடி பண்ணி பாப்பேன். முடிஞ்சவரை அதை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்வேன், ஏன்னா நல்ல கண்டிசன்ல கொண்டு வந்திட்டா அந்த பொருள் மேல நாம இன்னும் பாதுகாப்பா வச்சிக்க கவனம் செய்வோம். நாளைக்கு நம்ம புள்ளைங்களுக்கு அத காட்டி அது எந்த காலத்துல பயன்படுத்தினது அப்போ என்ன சூழ்நிலையில நம்ம நாடு இருந்துச்சி, அப்போ நம்ம குடும்பம் எந்த நிலையில இருந்தோம்னு சொல்லி கொடுத்து வளர்க்கலாம். அப்போ அத அழகா புரிஞ்சிப்பாங்க நாமலும் கொஞ்சம் சுவாரசியமா கதை சொல்லும் பாணியில சொல்லும் போது அதுங்களும் நல்ல முறையிலயே வளரும்னு என்னோட நம்பிக்கை”.
சொல்லி முடித்தபடியே கோபாலகிருஷ்ணனனை பார்த்தார். அவரும் சுவராசியமாக காளிமுத்துவை பார்த்தார்.
“நானு வாங்கிட்டு வந்த பெட்ரோமாஸ் லைட்டுல ஒரு சின்ன ரிப்பேர் இருந்துச்சி அத தூக்கி வச்சிட்டு காலங்காத்தாலயே அத கொடஞ்சிட்டு இருந்தேன் எப்டியாவது சரி பண்ணிடலாம்னு. அத பாத்திட்டே இருந்தான் என் பக்கத்து வீட்டு பையன். “என்னப்போ பண்ணுற? பெட்ரோமாஸ் லைட்டு மாதிரி இருக்குனு” கேட்டான்.
“ஆமாப்போ இப்ப தான் பழைய கடையில வாங்கிட்டு வந்தேன் ஒரு சுமால் ரிப்பேர் இருக்கு அத சரி பன்றேன்னு” சொன்னேன்.
“எங்க அத கொடுங்கன்னு” சொன்னான்.
“ஏம்பா நீ சரி பண்ண போறியானு” நக்கலுக்கு கேட்டேன். ஏன்னா இந்த காலத்து பிள்ளையளுக்கு அத பத்தி எங்கே தெரியப்போவுதுன்னு நினைச்சேன். ஒரு லுக்கு விட்டுட்டு அத என்கிட்டயிருந்து புடுங்கி பத்தே நிமுசத்துல அத திறந்து சரி பண்ணி கொடுத்திட்டான்.
“ஏப்பா எப்டிப்பா” என்று ஆச்சர்யமா கேட்டேன்.
“எங்க தாத்தா கிட்டே படிச்சேன்னு” சொன்னான். அப்போதான் அவன் தாத்தா நினைப்பு வந்துச்சு. அவரு அடிக்கடி என்கிட்டே சொல்லுவாரு “ எலேய் நான் கலெக்டர் வேல மட்டும் தான் பாக்கல மீதி எல்லா வேலையும் பாத்திருக்கேன்னு அசால்ட்டா சொல்வாரு”
“அப்போதான் அவரு சொன்ன வரலாறு ஒன்றை நினைச்சு பார்த்தேன். அவர் பழைய காலத்து கதையை என்கிட்டே அடிக்கடி சொல்லுவாரு. அதுபோலத்தான் அவரு பேரன் கிட்டேயும் சொல்லியிருப்பாரு போல. அதான் பையன் இப்படி லைட்டை ரிப்பேர் பார்த்திருக்கான்” என சிரித்தார் காளி முத்து.
கோபாலகிருஷ்ணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இவரிடம் 2000 ஆயிரம் புத்தகத்தினை ஒப்படைத்து விட வேண்டும் என்று நினைத்தார்.
அதற்குள் காளிமுத்து தோளில் துண்டை தூக்கி போட்டுக்கொண்டு , “ஒரு நிமிசம் இருக்கியளா இப்போ வாரேன்னு” சமையல் கட்டுக்குள்ள நுழைஞ்சாரு.
2 நிமிடத்தில் வெளியே வந்தார்.
“நம்ம தோட்டத்து எலும்மிச்சை தான். காலையில மரத்துல இருந்து விழுந்து கிடந்தது. அதை வைச்சி ஒரு ஜுஸ் போட்டு இருக்கேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்” என கொடுத்தார்.
இருவரும் குடித்து விட்டு “நல்லா இருக்கு” என்றனர்.
சிரித்தார் காளிமுத்து. “பொய் தானே. நானே குடிச்சி பார்த்தேன் நல்லாவே இல்லை”.
இருவரும் பதில் சொல்ல முடியாமல் நெளிந்தனர்.
“சரி அவன் தாத்தா சொன்ன கதையை இடையிலேயே விட்டுட்டேனே”. என ஆரம்பித்தார்.
“70&80 கால கட்டங்களுல கல்யான வீடுகள்ல பெட்ரோமாஸ் லைட்டு தலையில வச்சி தூக்கிட்டு போற வேலைக்கெல்லாம் தாத்தா போயிருக்காராம், அப்ப அத பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்காரு. இந்த தாத்தா மட்டுமல்ல எங்க அப்பா கூட இந்த மாதிரி நெறைய தொழில் செய்வாராம்.
எனக்கு தெரிஞ்சி எங்க அப்பா அந்த காலத்திலே எல்லா வித விவசாயம் பண்ணியிருக்காரு, எல்லா வித கூலி வேலைக்கும் போயிருக்காரு. தஞ்சாவூர் ஜவுளிக்கடையில வேல பாத்திருக்காரு, மண்ணு சுமந்திருக்காரு, சின்ன சின்ன கடையில வேல பாத்திருக்காரு, அம்மாவும் அப்பாவும் விறகு வெட்டி அந்த காசையெல்லாம் வச்சி குடும்பம் நடத்திருக்காங்க, கொத்த வேலைக்கு போயிருக்காரு, பள்ளிகூடத்துல தறி வாத்தியார் வேலை கிடைச்சி போயிருக்காரு. ஒரு கால கட்டத்திலே ஆட்சி மாற்றத்துல அந்த வேலயும் போச்சி. ஆனாலும் மனம் தளராம உழைச்சாரு. அதுபோலத்தான் தாத்தாவும் பெரிய உழைப்பாளி.
ஒரு கால கட்டத்தில எங்கப்பா எங்களையெல்லாம் பெத்து சிட்டி பக்கம் வந்தாரோ அப்பவே இந்த தாத்தாவும் வந்துட்டாரு. பக்கத்து பிளாட்டு தான். இரண்டு பேரும் பிளம்பிங் வேலைக்கு போய் அந்த தொழில நல்லா கத்துகிட்டு சாகும் வரை அதை தான் பண்ணினாங்க. இரண்டு பேரும் பாட்னர் மாதிரி. இணை பிரிய மாட்டாங்க. புள்ளைங்க நாங்க வேல பாக்க ஆரமிச்சதும் வேலைக்கு போக வேணாம்னு சொல்லி எங்கப்பாவை சத்தம் போட்டோம். உழைச்சி சாப்ட உடம்புன்றதால அப்ப அப்ப சொந்தக்காரங்க வீட்டுக்கு மட்டும் பிளம்பிங் வேல பாத்திட்டு வருவாரு. அவ்ளோதான்”.
சிறிது நேரம் மூச்சி விட்டு விட்டு தொடர்ந்தார்.
“எங்கப்பாவுக்கு கண்ணாலம் நடந்த அந்த காலமும் , தாத்தா பெட்ரோமகாக்ஸ் லைட் சுமந்த காலமும் ஒண்ணுத்தான். அப்பலாம் மூகூர்த்தத்துல பகல்லயும் கல்யாணம் நடக்கும் நைட்டும் சில வீடுகள்ல கல்யாணம் நடக்கும். கல்யாணம் நடந்த அன்னைக்கு ஊர்ல இன்னொரு கல்யாணம் வருதுன்னா, ஊர்கூடி பேசி எங்கப்பாவுக்கு பகல்ல கல்யாணமும் இன்னொரு ஜோடிக்கு நைட்டு கல்யாணம் நடந்திருக்காங்க. இத ஏன் சொல்ல வரேன்னா அப்போ ஊர்ல ஒரு கல்யாணம்னா பெரும்பாலானா வீடுகள்ல சமைக்க மாட்டாங்க கல்யாணத்துல மொத்த குடும்பமும் போய் நல்லா மொக்கிட்டு கூடவே பெரிய சட்டியா கொண்டு போய் சோறும் கொழம்பும் வாங்கிட்டு வந்திடுவாங்க. அதுக்கு சட்டிசோறுனு பேரு”. சிரித்தார்.
“அட போங்கய்யா. இப்பவும் ஸ்ரீவைகுண்டம் பக்கம் போங்க. அங்க பல கிராமத்தில சட்டிசோறு கலாச்சாரம் இருக்கத்தானே இருக்கு. யாரவது மண்டபத்தில கல்யாணம் வச்சா. கூறு கெட்டபய ஊரு சாப்பாட மிச்சப்படுத்த மண்டபம் பாத்திருக்கான். அவன் வீட்டுக்கு நாயி போவுமா என திட்டுவானுவ”. மீண்டும் சிரித்தார்.
“சட்டி சாப்பாடு இந்த கதை மேலே எல்லாம் கோபாலகிருஷ்ணனுக்கு நாட்டம் இல்லை. வரதன் புத்தகம் முழுவதையும் இவர்கிட்டே எப்படி கொடுக்க. இவர் வாங்கி கொள்வாரா?”
என்ற எண்ணம் வந்தது அவரை ஆட்கொண்டது. ஆகவே இருப்பு கொள்ளவில்லை. தவித்தார்.
ஆனால் அப்பா காலத்து கல்யாண கதையை காளிமுத்து விடவில்லை. திரும்பவும் ஆரம்பித்தார்.
செய்வது அறியாமல் தவித்தார் கோபாலகிஷ்ணன்.
“இப்பலாம் கல்யாணத்துல சாப்டுறதே கவுரவ கொறைச்சலா போச்சி. ஆனால் அப்பா காலத்தில அப்படி இல்லை. ஒரே நாள்ல ரெண்டு முகூர்த்தம்னால காலையில ஒரு முகூர்த்தம் நைட்டு ஒரு முகூர்த்தம்னு போய் சாப்பிடுவாங்க. அப்போ இந்த மாதிரி நைட்டு நடக்குற கல்யாணம் வெறும் பெட்ரோமாஸ் லைட்டு வச்சும் தீ பந்தம் வச்சும் மட்டுமே நடக்கும். தெருலைட்டு கிடையாது நிறைய வீடுகளுக்கு கரெண்ட்டு கூட இருந்திருக்காது. அப்போ தீப்பந்தமும் தூக்குறவனும் பெட்ரோமாஸ் லைட்டு தூக்குறவனும் தான் ஒரு கல்யாணம் முடியுற வரை கூடவே நிக்கனும். நினைச்சி பாருங்க” .
“இப்போ வீடியோ போட்டோ காரன் மாறி”வேண்டா வெறுப்பாக தலையாட்டினார் கோபாலகிருஷ்ணன்.
“இப்பவும் இன்னைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய்னு இருக்குறவங்களோ இல்லனா உள்ளூர்ல பெரிய கெத்து காட்டுற வேலையில இருக்கிறவங்களும் ஒரு காலத்தில வீட்ல இருக்கிற கைவிளக்குல, லாந்தர்ல, சின்ன மண்ணெண்ணெ வெளக்கு, குத்துவிளக்கு வெளிச்சத்துல படிச்சி வளர்ந்தவிய தான். அவங்க கிட்ட பேச்சு கொடுத்து பாருங்க விளக்குகள பத்தி கத கதையா சொல்வாவ, கேட்கவே நிறைய சந்தோஷமா இருக்கும்”.
சந்திரன் நினைத்தான். “விளக்கு மேலே இவ்வளவு பாசம் வைச்சவரு. இப்போ விதவிதமாக விளக்கை சேகரித்து வைத்திருக்காரு. அதனால 2000 புத்தகத்தை வாங்கி சேகரிப்பாரா என்ன?. அதில அவருக்கு ஈடுபாடு இருக்குமா?”
“சரி. இவர் விளக்கு கதையை முடிச்சாத்தான் புத்தகத்தை பத்தி பேசுவாரு. அதுவரைக்கு பொறுத்தே ஆக வேண்டும்”. என்று இருவரும் மனதுக்குள் நினைத்தனர்.
பொறுமையுடன் காளிமுத்து பேசும் கதையை வேண்டா வெறுப்பாக கேட்க ஆயத்தமானார்கள் இருவரும்.
ஆனால் அதை புரிந்த கொண்டது போலவே சிரித்தப்படி காளிமுத்து பேசினார்.
“பாவம் நான் என்னோட லைட் பெருமையை பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க எதுக்கு வந்தீங்கன்னுசொல்லவே இல்லையே”.
இருவருக்கும் சந்தோசம் வந்தது.
“அப்பாடா ஒரு வழியா நம்ம மேட்டரை பேச வந்துட்டாரு”. கோபாலகிருஷ்ணன் நிமிர்ந்தார்.
“ஒண்ணுமில்லையா. எங்க கிட்ட 2000 புத்தகம் இருக்கு. அதை பாதுகாக்க ஒருத்தர் வேணும். அதோட மட்டுமில்ல. அதை சரியா பயன்படுத்தனும். அது உங்களாலதான் முடியுமுன்னு அய்யா உங்க கிட்ட கூப்பிட்டுட்ட வந்தாவ”. என்றார் சந்திரன்.
மீண்டும் சிரித்தார் காளிமுத்து.
மனுசன் எதுக்கெடுத்தாலும் சிரிக்கிறார். ஒருவேளை கேலி பண்ணி சிரிக்காரோ?
“யப்பான நான் பழைய பொருளை சேகரிக்கிறதுன்னா இன்னைக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பாத்திர பண்டங்களை கூட காப்பாத்தி வைச்சிபுடலாம். ஏன்னா மாசத்துக்கு ஒரு நாள் துடைச்சா போதும். ஆனால் பேப்பரை காப்பாத்த முடியாதுப்பா?”
கோபாலகிருஷ்ணன் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. “அப்போ இவர் 2 ஆயிரம் புத்தகத்தை வாங்க மாட்டாரா?. அதை நான் எங்கே கொண்டு வைப்பேன்”.
சிரித்தார் காளிமுத்து.
“புத்தகத்தை நான் ஏன் வேண்டாமுன்னு சொல்லுதேன் தெரியுமா? ஏன்னா நம்மளவிட கரையான் வேகமாக பேப்பர் படிக்கும்”.
கோபாலகிருஷ்ண் ஏறிட்டார். “வரதன் சொன்ன அதே வார்த்தை. காளிமுத்துவும் சொல்கிறார்”.
“ஆமாம். பரிட்சைக்கு நல்லா கரைச்சு குடிக்கிறோமுன்னு சொல்லுவாவ. இங்க கரையான் நல்லா கரைச்சு குடிக்கு” மீண்டும் சிரித்தார்.
“அதான். நம்மளால புத்தகத்தை காப்பாத்த கஷ்டமா இருக்கு” என்றார். அதோடு விடாமல் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
“ஒரு காலத்தில நிறைய ஓலைச்சுவடி சேத்து வச்சிருந்தேன். அந்த காலத்தில சப்ரிஜிஸ்டர் அபிசுல பத்திரமே ஓலைச்சுவடியில தான் போட்டுருக்காவ. அதையெல்லாம் வச்சிருந்தேன். பனை தொழில் கஷ்டமுன்னு நாமா இப்ப விட்டுட்டோம். ஆனால் பனை ஓலை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா இருந்துருக்கு தெரியமா?. நான் நிறைய பேப்பர் சேகரிச்சு வச்சிருந்தேன். உங்களுக்கு தெரியுமா? தூத்துக்குடியில ஒரு தியேட்டர் 43 வருசத்துக்கு எரிஞ்சி 100க்கு அதிகமான மக்கள் எரிஞ்சி போனாவலே அந்த நியூஸ் பேப்பரும் வச்சிருந்தேன்.
அப்புறம் நம்ம ஸ்ரீவைகுண்டம் பக்கம் ஒரு பனையேறி குடும்பத்தை மதுரை பக்கம் வச்சி 6 உயிரை துள்ளத்துடிக்க எரிஞ்ச கொன்னாவளே அந்த பேப்பர் கூட சேரிச்சி வைச்சிருந்தேன்”.
சந்திரனுக்கு பனையேறி என்றவுடன் கவனம் திரும்பியது.
“அய்யா அது என்ன சம்பவமய்யா? அந்த பேப்பர் எங்க இருக்கு எங்களுக்கு கிடைக்குமா?”
“நல்லதா போச்சு வா. நான் பெரிய பேப்பர் பொட்டிவைச்சிருக்கேன். அதை திறந்து பாத்து ரொம்ம நாளாவது. பொட்டியை அடைச்சு காத்து போவாமா வச்சாலும் பேப்பர் கெட்டு போவும். வா இன்னைககு திறந்து பாப்போம்” என்றார் காளிமுத்து.
இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு வீட்டு மாடிக்கு போனார். அங்கே சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் ஆங்காங்க சிதறி கிடந்தது.
எதையும் வரிசையாக அடுக்கி வைக்க வில்லை.
காளிமுத்து சொன்றார்.
“முன்னாடி நானும் என் பொண்டாட்டியும் வாரம் வாரம் எல்லா புத்தகத்தையும் அடுக்கி வைப்போம். பாச்சாம் உருண்டை போடுவோம். சில நேரம் பூச்சி மருந்து அடிச்சு வைப்போம். அவ போன பொறவு நான் மேலேயே வரலை. அதான் நிறைய இடத்தில் நூலாம்படையா இருக்கு. இடையில கொஞ்சம் கலேஜ் பிள்ளையள மேலே அனுப்பி வைச்சேன். அவிய இப்படி கூத்து பண்ணி போட்டுட்டு போயிருக்காவ”
எங்கு பார்த்தாலும் நூலாம்படையும், புத்தக வாடையும் வந்தது.
மூக்கை பிடித்துக்கொண்டு தான் உள்ளே நுழைந்தார்கள்.
“என்னையா வாசம் ஒரு மாதிரி இருக்கா. கிட்டத்தட்ட 6 மாசம் திறக்கல. என்ன செய்ய வயசாயிட்டுல்லா. என்னால மேலே நடந்து வர முடியலை. யாரும் உதவி பண்ண வரவில்லையா. என்ன செய்யன்னே தெரியலை” காளிமுத்து பரிதாபமாக முழித்தார்.
சந்திரன் சொன்னான், “அய்யா கவலை படாதீய்ய. கோபாலகிருஷ்ணன் அய்யா வேலை முடிஞ்சவுடனே உங்க கிட்ட வந்து . இந்த புத்தகத்தை அடுககி வைச்சிட்டு போறேன்”
கோபாகிருஷ்ணன் மனதுககுள் சொன்னார். “சரி ஒரு நல்ல அடிமை காளிமுத்துக்கு சிக்கிட்டான். சரி. நமக்கு அவன் அடிமைதானே. இவனை வச்சிதானே நாம புத்தகத்தை யாருகிட்டேயாவது கொண்டு போய் சேக்கணும்”. அதே நேரம் அவருக்கு வேறு ஒரு யோசனையும் தோன்றியது.
“இங்குள்ள புத்தகத்தையே இவரால காப்பாற்ற முடியல. இவருக்கிட்டே எப்படி மேலும் 2 ஆயிரம் புத்தகம் கொடுக்க. அதை எங்கே காப்பாத்த போறாரு”.
கோபாலகிருஷ்ணனுக்கு வருத்தமாக இருந்தது.
ஆனாலும் மனந்தளராமல் அவர்கள் உடனே சென்றார்.
“எங்கிட்ட வெளிநாட்டு காயின் எல்லாம் இருக்கு. பத்திரமா வைச்சி இருக்கேன். எல்லாத்தையும் பெரிய ரேட் போட்டு கேட்கனுவ. ஆனால் எனக்கு கொடுக்க மனம் வரல. பெத்த பிள்ளை மாறி ஆசை ஆசையா சேத்ததுல்லா. அதை பாதுகாக்கவும் பெரும் பாடு இல்ல. ஆனால் இந்த பேப்பர் மட்டும் இப்படியாடுச்சி”.
அருகில் உள்ள அறைக்குள் சென்றார். அதுவும் நுலாம் படையாகவே இருந்தது.
“வீட்டம்மா நூல் பிடிக்க விடமாட்டா. கோயில் மாறி வீட்டை வைச்சிருந்தா”.
காளிமுத்து பொலம்பிக்கொண்டே வந்தார்.
“சில நேரம் பழைய பேப்பர் காரனுங்களுக்கு இதையெல்லாம் அள்ளிப் போட்டுறலாமோன்னு நினைக்கேன்” பின் அவரே சொல்லிக்கொண்டார்.
“ ம். அதுக்கா இதையெல்லாம் சேத்து வைச்சேன். எல்லா புத்தத்திலும் என் பெண்டாட்டி கை பட்டிருக்கு . அவ வாழ்ந்துகிட்டு இருக்கா”.
பெரும் மூச்சு விட்டார்.
ஒரு பொட்டி அருகே வந்து நின்றார். அது பெரிய மரப்பொட்டி. அதற்குள் நிறைய பொருள் டன் கணக்கில் வைக்கலாம்.
“இந்த பெட்டியை திற”. என்றார் காளிமுத்து.
சந்திரன் திறந்தார்.
உள்ளே நிறைய பைல்கள் தெரிந்தன.
ஒவ்வொரு பைல் முன்பக்கத்தில் வருடம் குறிப்பிட்டு இருந்தார். முக்கிய செய்திகளை அப்படியே பைல் பண்ணி பைண்டிங் போட்டு வச்சிருந்தார்.
“உனக்கு என்ன சம்பவம்வேணும்”.
“நீங்க சொன்னீங்களே அந்த ஸ்ரீவைகுண்டம்பககத்தில ஏதோ பனையேறி வீட்டில நடந்த சம்பவம். அந்த பைலை தாங்க பாப்போம்.”
“1996 அல் இருந்து 2001 க்குள்ள அந்த பனையேறி சம்பவம் நடந்திருக்கணும். ஏன்னா அப்போ தான் த.மா. கா எம்.எல்.எ நிறைய பேரு நம்ம பகுதியில இருந்தாங்க. அந்த ஊரு பையன் சுயம்புலிங்கன்னு ஒருத்தர் தான் . எங்கிட்டே இருந்து நகல் எடுத்து பத்திரமான வச்சிருக்காரு. அப்புறம் அது எங்கிட்ட மட்டும்தான் இருக்கு”. காளிமுத்து பெருமிதமாக சொன்னார்.
“2021 ல் இருந்து கிட்டதட்ட 25 வருட பைலை தேடிக்கொண்டே சென்றான்” சந்திரன்.
அவனுக்கு பனையேறி என்றவுடன் ஒரு ஆர்வம்.
“அந்த பனையேறிக்கு அரசு ஏதாவது நஷ்ட ஈடு கொடுத்து இருந்தால் , அதை வச்சி லிங்க நாடருக்கு ஏதாவது வாங்கி விடாலமே.அப்படி வாங்கி கொடுத்த முத்துகிளி கிட்ட நல்ல பேரு வாங்கிடலாமே” என ஆதங்கம்.
உள்ளே இருந்து வந்த தூசி முகத்தில் பட்டு விடக்கூடாது என்று கோபாகிருஷ்ணன் நகர்ந்து கொண்டார். “எதற்கோ வந்தோம். ஏதோ நடக்கிறது. சரி. எல்லாம் நன்மைக்கே”. என தன்னை தானே தேற்றிக்கொண்டார்.
1996 ல் 2001 வரை உள்ள பைல்லை எடுத்து வைத்தாகி விட்டது. இனி தேட ஆரம்பித்தார்கள். பேப்பர் முழுவதும் கொஞ்சம் பழுப்பேறி இருந்தது. இறுதியில் அந்த முக்கியமான பேபபர் அவர்கள் கையில் கிடைத்தது.
மார்சு மாதம் 1999 ஆம் வருடம் அந்த செய்தி தாள்கள் வரிசையாக தொகுக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொன்றாக சந்திரன் எடுத்துப்பார்த்தான்.
“கருங்குளம் பனைத்தொழிலாளர் குடும்பத்தினர் 6 பேர் கருகி பலி & கள்ளச்சாராய வியாபாரி தொழில் போட்டியில் தீ வைத்து எரித்து கொன்றார்”. இது நாடார் முரசு மார்ச் 1999 மாத இதழ்.
“எஸ்.ஐ யால் எரியும் தென் மாவட்டம்; கூண்டோ கொளுத்தபடப்பட்ட கள் வியாபாரி குடும்பம்” . இது நெற்றிக்கண் மார்ச்சு 1999 இதழ்.
“ஒரே குடும்பத்தில் 6 பேர் கருகி சாவு: நீதி விசாரணை நடத்தக்கோரி உண்ணாவிரதம்; நாடார் இளைஞர் பேரவை சார்பாக சென்னையில் நடந்தது”. 3.04.1999 தினத்தந்தி நாளிதழ்.
“குடும்பமே தீக்கிரை. குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லையே உயிர் தப்பிய கருங்குளம் தொழிலாளி கண்ணீர் பேட்டி” தினகரன் 8.03.1999
“தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தினை சேர்ந்தவர்கள் பனைஏறும் தொழிலாளி குடும்பம் உயிரோடு எரிப்பு தாத்தா பேரன் பலி 4 பேர் தீயில் கருகினர்”. தினகரன் 6.03.1999
“பனைத்தொழிலாளர்கள் குடும்பத்தோடு பலி நீதி விசாரணை வேண்டும்; நாடார் சங்க பொதுச்செயலாளர் அறிக்கை” தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவையின் தமிழன் மடல் 31.03.1999
இது போன்று கத்தை கத்தையாக செய்தி தாள்கள் தென்பட்டது.
தலைப்பை பார்க்கும் போதே உருக்கமாக இருந்தது. “என்னடா இது பனை தொழிலாளிகள் எங்கே சென்றாலும் இதுதான் பிரச்சனையா?”
வேதனையோடு சந்திரன் நக்கீரன் பேப்பரை மட்டும் எடுத்துக்கொண்டு மனதுக்குள் படிக்க ஆரம்பித்தான்.
எஸ். ஐ. யால் எரியும் தென் மாவட்டம் என்று தலைப்பிட்ட அந்த செய்தியை அவன் படிக்க படிக்க மனதை உருக்குவதாகவே இருந்தது.
சந்திரன் படிக்கும் போதே மதுரை காசி நாடார் சம்பவம் நம் கண் முன்பு வந்து சென்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள நாகைய்யாபுரம் காவல்துறை லிமிட்டிற்குட்பட்டது, பொட்டிபுரம் என்ற கிராமம்.
இப்பகுதியில் உள்ள சாராய வியாபாரிகளை உற்சாகப்படுத்தி தொழிலை விருத்தி செய்வதில், சப்-இன்ஸ்பெக்டர் தாணுவுக்கு நிகர்தாணுதான் என்று சொல்லலாம். அருகில் உள்ள பாப்பநாயக்கன்பட்டியில் வசிக்கும் சிங்கத்தேவர் என்ற கள்ளச்சாராய வியாபாரிதான் தாணுவுக்கு வலதுகை மாதிரி!
கள்ளச் சாராயத்தை காய்ச்சி கேன் கேனாக அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு சப்ளை செய்வதுதான் சிங்கத்தேவரின் தலையாய கடமை. இந்த சிங்கத்தேவரின் பிசினசுக்கு வேட்டு வைக்கும் சூழ்நிலை ஒன்று உருவானது.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்தவர் காசிநாடார் என்பவர்.
இவர் பனையேறும் தொழிலாளி. ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஊரை விட்டு கிளம்பி மாவட்டம், மாவட்டமாக அலைந்து மொத்த பனைமரங்களை குத்தகைக்கு பேசி பதனீர் இறக்கி பஞ்சம் பிழைத்து வரும் தொழிலாளி.
இவர் எந்த ஊருக்கு பனையேற சென்றாலும் அவரது தொழிலுக்கு துணையாக தனது மனைவி, பிள்ளைகள், ஆதரவற்ற மாமியார், மாமனார் ஆகியோரையும் கூடவே அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு பாப்பநாயக்கன் பட்டியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பனைகளை குத்தகைக்கு எடுத்து பதனீர் விற்று வந்திருக்கிறார். இதற்காக பொட்டிபுரத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஓலைக் குடிசையை தற்காலிகமாக டெண்ட் அடித்து குடும்பத்துடன் தங்கி தொழிலைக் கவனித்து வர 22.01.99 அன்று முதல் தங்கினார்.
காசி நாடார் பதநீரை விற்று வந்தது எஸ்.ஐ. தாணுவிற்கு எரிச்சலூட்டியது. காரணம், பதநீர் விற்பவரிடம் மாமூல் வாங்க முடியாதே! உடனே, தனது காக்கிச்சட்டை படை மூலம் காசிநாடாரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து ‘நீ பதனீர் விற்கக் கூடாது. பதனீருடன் சுண்ணாம்பைக் கலக்காமல் சுத்தமான ‘கள்’ விற்க வேண்டும். எனக்கு ரூபாய் 5 ஆயிரம் மாமூல் கொடுக்க வேண்டும். மறுத்தால் குடும்பத்தோடு நீ உள்ளே போக வேண்டியிருக்கும்’ என அதிகார தோரணையில் வீரவசனம் பேசினார். காசிநாடாரை தனது வளையத்துக்குள் எப்படியோ கொண்டு வந்து ஒரு வழியாக பேரம் பேசி மாதம் 2 ஆயிரம் மாமூல் என நிர்ணயம் செய்து புதிதாக ஒரு ‘கள்’ வியாபாரியை உருவாக்கினார் எஸ்.ஐ.தாணு.
ஊரு விட்டு ஊரு வந்து பிழைக்க வந்த காசிநாடார், தன்னை நம்பிவந்த ஏழு ஜீவன்களின் நலன் கருதி காக்கிச்சட்டைகளின் மிரட்டலுக்குப் பணிந்து, வேறு வழியின்றி முதல் மாத மாமூலை தாணுவிடம் அழுது தொலைத்தார். தாணு எஸ்.ஐ. மாமூலை வாங்கிய தேதி 15.02.99.
அந்தக் குறுகிய சில நாட்களிலேயே காசிநாடாரின் ‘கள்’ விற்பனை களை கட்டத் தொடங்கி விட்டது. வெயில் காலம் என்பதால் குடிமக்கள் சாராயத்தை விட கள்ளுக்கு முதலிடம் கொடுத்து, காசிநாடாரின் தொழிலுக்கு புத்துணர்ச்சி கொடுத்தனர்.
சிங்கத் தேவரின் சாராய பிசினஸ் படுத்து விட்டது. ஆத்திரம் அடைந்தார், சிங்கத்தேவர். ஊரு விட்டு ஊரு வந்த பயல் பக்கம் வாடிக்கையாளர்கள் செல்கின்றார்களே எனக்கருவினார்.
இந்த நிலையில் தனது நீலநிற டி.வி.எஸ்.-50 வண்டியில் தனது நாவிதர் இனத்தைச் சேர்ந்த ஒரு அடியாளுடன் அடிக்கடி காசி நாடாரின் கள் ஸ்பாட்டிற்கு சிங்கத்தேவர் செல்வது வழக்கம். அங்கு கள் விற்கும் காசிநாடாரின் மனைவி சேர்மக்கனியிடம் வம்பு பேசி ‘ ஓசியில் கள்ளும் குடித்து விட்டு ‘உன் புருஷனால்தான் என் வியாபாரம் படுத்து விட்டது. நான் அவனை சும்மா விடப்போவதில்லை’ என கள் பானைகளை எட்டி உதைப்பதும் சிங்கத்தேவருக்கு வழக்கம்.
இப்படி அடிக்கடி சிங்கத்தேவரும் அவரது அடியாட்களும் வந்து மிரட்டல் படலத்தை தொடர்ந்தனர். கடந்த 04.03.99 அன்று அவர்களது அடாவடித்தனம் உச்சகட்டத்தை அடைந்தது.
அன்று காலை சிங்கத்தேவரும் அவரது கைத்தடியான நாவிதர் இனத்தைச் சேர்ந்த அந்த நபரும் டி.வி.எஸ்.-50யில் வந்து “நீ ஊரை விட்டே ஓடி விட வேண்டும். இல்லையென்றால் எனக்கு 5 ஆயிரம் ரூபாய் மாமூல் தர வேண்டும்” என காசிநாடாருக்கு அதிகார உத்தரவு போட்டனர்.
இச்சம்பவத்திற்குப் பின் அன்று இரவு சுமார் 11 மணியிருக்கும்..
சிங்கத்தேவர் அண்ட் கும்பல்ஸ், காசிநாடார்குடும்பம் தங்கிருந்த குடிசைக்கு வந்து அவரது மனைவி சேர்மக்கனியை, “நாடார் அம்மா, நாடார் அம்மா” என அழைத்திருக்கிறார் சிங்கத்தேவர்.
திடுக்கிட்டு விழித்த காசிநாடார் என்னவென்று கேட்க, ‘கள்குடித்த பாக்கியை கொடுக்க வந்தோம்” எனக் கூலாக சொல்ல, பதிலுக்கு காசிநாடார், “கள் பாக்கியை கொடுக்கும் நேரமா இது. காலையில் வாங்க” என அனுப்பியுள்ளார். ஆத்திரம் அடைந்த சிங்கத்தேவர், “அப்படியா நான் பார்த்துக் கொள்கிறேன்” என
வீராப்புடன் சென்று விட்டாராம்.
சிறிது நேரத்தில் அந்தப் படுபயங்கரமான செயல் நடந்திருக்கிறது. இதன்பிறகு நடந்த கொடூரத்தை, காசிநாடாரே கண்ணீரோடு நக்கீரன் நிருபரிடம் விவரித்தார். அதை குறிப்பிட்டிருந்தார்கள். இந்த செயலை படிக்கும்போது இப்படியரு சம்பவம் நடக்குமா? என்பது போல் கொடுரத்தனமாக இருந்தது. நாமும் காசி நாடார் சொல்வதை கேட்போம்.
“கடந்த 04.03.99 அன்று சிங்கத்தேவரும் அவரது அடியாட்களான நாவிதர் இனத்தைச் சேர்ந்த அந்த வாலிபரும் மற்றும் சில அடியாட்களும் எங்களிடம் வாக்குவாதம் செய்து விட்டு சென்றனர். பிறகு திடீரென மறுபடியும் வந்து, அவர்கள் கொண்டு வந்த பெட்ரோலை நாங்கள் தங்கியிருந்த குடிசையிலும் தரையிலும் ஊற்றி தீ வைத்து விட்டனர்.
தீ மளமளவென எரிந்ததும் வயதான என் மாமனார் அப்படி இப்படி நகர முடியாமல், அந்த இடத்திலேயே கருகி இறந்து போனார். என் மனைவி, குழந்தைகள் அனைவருமே தீயில் மாட்டிக் கொண்டு விட்டனர். நாங்கள் சம்பாத்தியம் பண்ணி கூரையில் சொருகி வந்திருந்த பணங்கள் எல்லாம் எரிந்து சாம்பலாகி போனாது.
நானும் என் மகன் கணேசனும் வெளியே தப்பி, வந்து அனைவரையும் காப்பாற்ற கூக்குரல் இட்டோம். கருகிப்போய் துடித்துக் கொண்டிருந்த குடும்பத்தினரைக் கண்டு ஊரே அலறிவிட்டது. பொட்டிபுரம் மக்கள் எங்களுக்கு ஆதரவாக உடனடியாக ஒரு வேன் கொண்டு வந்து என் குடும்பத்தினர் அனைவரையும் ஏற்றி திருமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்ற போது டாக்டர்கள் இல்லை என்று சொன்னதால், மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு சென்ற கொஞ்ச நேரத்தில் அனைவருமே இறந்து விட்டனர்” என்று காசிநாடார் கதறினார். ‘அனைவருமே’ என்று அவர் சொன்னதில் பத்து மாதக்குழந்தை மகேந்திரன், ஏழு வயது மகள் மஞ்சுளா, மூன்று வயது மகள் பொன்னுத்தாய், மாமனார், மாமியார் மற்றும் மனைவி
சேர்மக்கனி ஆகியோர் அடக்கம்.
“இதற்கிடையே பொட்டிபுரம் ஊரில் எங்கள் குடிசை எரிந்தபோது, ஓடைக்கரை ஓரம் சிங்கத்தேவரும் அவரது ஆட்களும் நிற்பதை நான் பார்த்தேன்
நாகைய்யாபுரம் காவல்நிலையம் சென்று அவர்கள் மீது புகார் கொடுத்தபோது, ஸ்டேஷன் ரைட்டர் ஏற்க மறுத்து விட்டார்”” என்ற காசிநாடார், அடுத்தபடியாக கொடுமையிலும் கொடுமையான ஒரு தகவலையும் சொன்னார்.
“மதுரை அரசு மருத்துவமனையில் என் ஒட்டு மொத்த குடும்பத்தையே இழந்து நான். அழுது கொண்டிருந்தேன். அந்த நேரத்திலும் எஸ்.ஐ. தாணு அங்கு வந்து என்னை மிரட்டினார். சிமிலி விளக்கு விழுந்துதான் குடிசை தீப்பற்றியது என சொல்ல வேண்டும். இல்லையென்றால் உன்னை விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்’ என்று வெள்ளைத்தாளில் என்னிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்” என்றார் காசிநாடார்.
காசிநாடார் குடும்பத்தில் இறந்து போனவர்களின் அத்தனை உடல்களையும், எஸ்.ஐ. தாணுவே தன் சொந்தச் செலவில் அடக்கம் செய்திருக்கிறார். தனது சாராய மாமூல் விவகாரத்தால் நடந்த கொலைகள் இது என்று வெளியுலகுக்கு தெரியாமல் மறைத்து விடுவதற்காக தாணு நடத்திய அனுதாப நாடகம்தான் இது.
காசிநாடார் குடும்பம் தீவைத்து கொல்லப்பட்ட சம்பவம், தென் மாவட்டங்களில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாடார் இன மக்கள் ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மதுரை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த ஜாங்கிட், உடனே துரிதமாய் களத்தில் இறங்கி சிங்கத்தேவரையும் அவருக்கு துணையாக இருந்த எஸ்.ஐ.- தாணுவின் மீதும் நடவடிக்கை எடுப்பது அவசியம்! இல்லையென்றால் இதன் தொடர்ச்சியாக இன்னும் பல அக்கிரமங்கள் உருவாகலாம்.
என்று அந்த இதழ் வரிந்து கட்டி கொண்டிருந்தது.
மற்ற இதழ்களும் இவரது வழக்கு குறித்து கூறியிருந்தனர்.
சந்திரன் நிமிர்ந்தான். அதை படித்தவுடன் பனையேறி நிலையை நினைத்து பதறினான். இப்படி ஒரு கொடுங்கோல் சம்பவம் நடந்திருக்கே. நாடு பாதி நாடார் பாதி என்று சொல்வார்களே. ஆனால் இந்த நாடார்கள் பிழைப்பு தேடி சென்ற இடத்தில் இப்படியரு பிரச்சனையா?
அடுத்ததடுத்த பத்திரிக்கையில் இருந்த கருத்தை மனதுககுள் படித்தான். அந்தசமயத்தில் நாடார் இன மக்கள் கொதித்தெழுந்த வரலாறுகள் சந்திரன் கண் முன் வந்து நின்றது.
இதற்கிடையில் கருங்குளத்தில் இருந்து மதுரைக்கு காசிநாடாருக்கு உதவ சென்ற உறவினர்களான நாடார் வாலிபர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பொய்வழக்கு போட்டு விட்டார்கள் என சிங்கத்தேவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கருங்குளம் அருகில் உள்ள செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கூறினர்.
அதோடு மட்டுமல்லாமல் அப்போது த.மா.கா எம்.எல்.ஏ வாக இருந்த மணி நாடார், அப்பாவு ஆகியோர் இவர்களுக்கு உதவியாக சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்கள்.
இதற்காக பல்வேறு போராட்டங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள நாடார் சங்கங்களும் இளைஞர்களும் நடத்தினர். காசிநாடார் குடும்பத்துக்கு ஏற்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டார்கள்.
அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி காசி நாடார் குடும்பத்துககு 1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.
ஆகா. ஒரு பனையேறி குடும்பத்தினை உயிரோடு எரித்திருக்கு ஒரு கும்பல். அந்த குடும்பத்தினை எரித்தவர்கள் மீது வழக்குபோட மறுத்து இருக்கிறது காவல் துறை. இதற்காக போராட வேண்டியது இருக்கே. ஆதியில் இருந்து இன்றுவரைக்கும் இது தான் நிலையா?
சந்திரன் நொந்து கொண்டார்.
கோபால கிருஷ்ணன் சொன்னார்.
“காசி நாடார் குடும்ப பிரச்சனைக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி , ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.எவாக இருந்தவரான அவரும் பேசினார். இதே போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லோரு«ம் குரல் கொடுத்தார்கள். 1 லட்ச ரூபாய காசோலையை தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ பெரியசாமி வீட்டில் வந்தே கொடுத்தார். இது எல்லாம் எனக்கு நினைவுக்கு வருது. அப்பாவு எம்.எல்.ஏ பங்கு மிகவும் அதிகமாக இருந்தது. அவர் மட்டும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வரவில்லை என்றால் காசிநாடார் பிரச்சனை சாதரணமான போராட்டமாகவே இருந்திருக்கும்.
காளிமுத்து தொடர்ந்தார், “அந்த நேரத்தில் மாவட்ட தலைநகரில் எல்லாம் போராட்டம் நடந்தது. கள்ளு வித்தார் என காசிநாடாரை சமூக விரோதியாக காட்ட முயற்சித்த போலிசுக்கு தக்க தண்டனை வாங்கி தந்திருக்க வேண்டும்”. விரக்தியாக பேசினார்.
“நாடார் என்றாலே இப்படித்தான். தானுண்டு தன் தொழில் உண்டு என்று இருந்தாலும் கூட அவர்களை வம்புக்கு இழுத்து விடுவார்கள். இதுக்கு ஏன் ரொம்ப தூரம் போற சாத்தான்குளம் சம்பவம் தெரியுமுல்ல. ஜீன் 2020 ல் சும்மா இருந்த தந்தையையும் மகனையும் போலிசு கூட்டிட்டு போய் அடிச்சே கொன்னாங்களே. அதை மறக்க முடியமா? அதுக்கு எத்தனை எத்தனை போராட்டம். சம்பவம் பண்ணின அந்த போலீஸ் இப்போ என்னா பாடு படுது பாத்தியளா?”.
“ உப்பு தின்னவன் தண்ணீ குடிச்சு தான் ஆகணும்”.
“எது எப்படியோ அய்யா, ஒரு பனையேறி பாதிக்கப்பட்டா அவருக்கு அரசு உதவி செஞ்சிருக்காவ கவர்மெண்டு. அப்படின்னா முத்து கிளி மாமா லிங்க நாடார் பிரச்சனையை எப்படியும் எம்.எல்.ஏ கிட்ட கொண்டு போய் நிவாரண நிதியை வாங்கலாமுன்னு நினைக்கேன்”. சந்திரன். அவன் கவலை அவனுக்கு.
சிரித்தார் காளிமுத்து, “உன் கவலை உனக்கு”
“சரி பழைய பேப்பரை கட்டி வையுங்கள். இப்போ நான் கொண்டு வந்த வரதன் புத்தகத்தினை நான் யார்கிட்டேயாவது ஒப்படைக்கணும். அதுக்கு என்ன செய்யலாம். கோபாலகிருஷ்ணன் கேட்டார்.
காளிமுத்து சிரித்தார்.
“அதற்கு நான் ஒரு முடிவு சொல்றேன்”. என்று காளிமுத்து சொல்லும் போதே நான் உங்க புத்தகங்களை வாங்க மாட்டேன் என்ற தீர்ககமான முடிவு அவர் முகத்தில் தெரிந்தது.
இதனால் கோபாலகிருஷ்ணனுக்கு எண்ணத் துடிப்பு அதிகரித்தது. அப்படின்னா இந்த 2 ஆயிரம் புத்தகத்தை என்ன செய்ய போறேன்.
தலையில் கை வைத்து விட்டார்.
அதற்குள் அடுத்த பைல் ஒன்றை தட்டி எடுத்தான் சந்திரன். அதில் 29.07.1979 ல் தூத்துககுடியில் நடந்த ஒரு சினிமா தியோட்டர் விபத்தில் 115 பேர் உயிரிழந்தார்கள்.
அது பற்றிய குறிப்புகளுடன் அந்த செய்தி தாள் சந்திரன் கையில் கிடைத்தது. அதை பார்த்து அதிர்ந்து நின்றான்.
ஆம். தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மறக்க முடியாத தீ விபத்துதான் அது.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)


