தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகளையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கிடைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருட்கள் குறித்த ஆய்வு பணி தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணியும், 2021 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும் நடைபெற்றது.
முதற்கட்ட அகழாய்வில் 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் வட்ட சில்லுகள், மண்பானைகள், மண் சட்டிகள் செம்பு மற்றும் இரும்பு பொருள்கள், நுண் கற்கருவிகள், சங்கு பொருள்கள், புடைப்பு சிற்பங்கள் என பல்வேறு அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட அகழாய்வில் சிவகளையைச் சுற்றியுள்ள ஒன்பது இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் 37 முதுமக்கள் தாழிகள், இரும்பு ஆயுதங்கள். நெல்மணிகள், வாள், கத்தி தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வு பணிகளில் கிடத்த முதுமக்கள் தாழியில் இருந்த நெல்மணிகளை வைத்து அதன் காலம் சுமார் 3,200 ஆண்டுகள் பழைமையானது என கண்ட றியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கியது. ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் சிவகளை பரம்பு, ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்களில் புதையிடப் பகுதியாகவும் பராக்கிரம பாண்டி திருடு, பொட்டல்கோட்டை திருடு ஆகிய பகுதியில் வாழ்விடப் பகுதியாவும் பிரிக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதில், வட்ட சில்லுகள், வளையல்கள், பாசிமணிகள், தக்களி, முத்திரைகள், எலும்பாலான கூர்முனை கருவிகள், புகைப்பான்கள், சக்கரம், காதணிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிவகளை பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட 10 குழிகளில் இருந்து கண்டறியப்பட்ட 34 முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை கண்டறியும் பணி இன்று தொடங்கியது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன், மற்றும் சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் ஆகியோரது தலைமையிலான குழுவினர் முதுமக்கள் தாழிகளில் இருக்கும் எலும்புகள் குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர். முதுமக்கள் தாழிகளில் கிடைக்கும் பழமையான பொருட்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
மரபணு சோதனை குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொல்லியல் துறையோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மரபணு சோதனை செய்து வருகிறோம். இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆய்வு கூடம் தொடங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை அகழாய்வு பணியில் கிடைக்கும் எலும்புகளில் நூறு மாதிரிகளை சோதனை செய்தால் ஒன்று மட்டுமே ஆய்வுக்கு உகந்தவையாக உள்ளது. பயாலஜிக்கல் முறையிலும் கெமிக்கல் முறையிலும் மரபணு சோதனை செய்து வருகிறோம். இதற்கு முந்திய அகழாய்வு பணிகளில் கிடைத்த மனித எலும்புகளின் மரபணு சோதனையில் 50 கோடி பீஸ்களில் ஐந்து முதல் 50 லட்சம் வரையே மனித எலும்பு மரபணு சோதனைக்கேற்றார் போல் உள்ளது. மற்றவை பாக்டீரியாக்களாக உள்ளது என்றார் அவர்.


