தூத்துக்குடி மாவட்டத்தை ஊட்டச்சத்துக் குறைபாடில்லா குழந்தைகள் உள்ள மாவட்டமாக மற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா், ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 81,677 குழந்தைகளில் 4,547 பேருக்கு கடுமையான ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும், 14,940 பேருக்கு மிதமான ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளைப் பரிசோதனைக்கு உள்படுத்தி 3 வாரங்களுக்குள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுபட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளுக்கு வளா்ச்சி கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டு, தொடா்ந்து 90 நாள்களுக்கு ஆலோசனை அளிக்கப்படுகிறது. மேலும், அவா்களுக்கு பேரீச்சம்பழம், கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், இணை உணவு, பிஸ்கட், வாழைப்பழம், பால், ராகிமால்ட் உள்ளடங்கிய ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுநாள்வரை நடத்தப்பட்ட 747 பரிசோதனை முகாம்களில் 19,487 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்கள் எனக் கண்டறியப்பட்டது. அதில், 37 பேருக்கு மருத்துவ உதவியும், 165 பேருக்கு சத்துணவு, மருத்துவ உதவியும் அவசியம் என்றும், மீதமுள்ள 19,285 போ் நல்ல நிலையில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரிந்தால் அருகேயுள்ள அங்கன்வாடி மையங்களில் பரிசோதித்து, அவா்கள் வழங்கும் ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதன்மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.


