தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தங்கையாபுரம் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஞானமணி. இவரது மனைவி லலிதா(65). இவர்களுக்கு 3 மகன்கள் 1 மகள் உள்ளனர். இதில் மகன்கள் அனைவரும் திருமணமாகி பெங்களூரில் கடலைமிட்டாய் கம்பெனி நடத்தி வருகின்றனர். மகன் செய்துங்கநல்லூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஞானமணி இறந்து விட்டார். லலிதா தனியாக தங்கையாபுரத்தில் குடியிருந்து வருகிறார்.
லலிதா கடந்த 20ம் தேதி தனது மகளின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என மகள் கூறியதால் அவரை பார்ப்பதற்காக செய்துங்கநல்லூர் வந்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக லலிதா மகளுடன் இருந்துள்ளார்.
இதற்காக வீட்டில் இருந்த 56 பவுன் நகையை பெட்ரூமில் உள்ள ஒரு சேரில் வைத்து அதன் மேல் தலையனை மற்றும் துணிகளை போட்டுள்ளார். மேலும் சில நகைகளை பெட்ரூமில் உள்ள அலமாரியில் வைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சொந்த ஊரான தங்கையாபுரத்திற்கு சென்றுள்ளார். வழக்கம் போல் வீட்டை திறந்துள்ளார். பின்னர் நகையை எடுத்து வைப்பதற்கு பெட்ரூம் சென்று பார்த்துள்ளார். அங்கு நகை இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அலமாரியில் இருந்த நகையும் திருடு போய் உள்ளது.
உடனே இதுகுறித்து லலிதா ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வீடு உடைக்காமல் நகை திருடு போயிருந்தது. எனவே லலிதாவின் உறவினர்கள் தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் உறவினர்களை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல நாட்டார்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராஜசெல்வம் என்ற அவரது உறவினரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தான் தான் திருடினார் என்று ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது,
லலிதா தனது மகளின் மகள் உடல் நலக்குறைவு காரணமாக இருப்பதாகவும் அவரை கவனித்துக் கொள்வதற்கு அவரை வரக் கூறியுள்ளார். இதனால் லலிதா அவரது மகள் வீட்டில் ஒரு வார காலமாக இருந்துள்ளார். அப்போது அவரது உறவினரான மேல நாட்டார்குளத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராஜசெல்வம் (32) என்பவர் அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது லலிதா இங்கு இருப்பதைக் கண்டு அவரது வீட்டில் நகைகள் அனைத்தும் வீட்டில் தான் இருக்கும் என்று நினைத்து இவருக்கு தெரியாமல் எங்கிருந்து வீட்டின் சாவியை எடுத்து சென்றுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள நகைகளை எடுத்துவிட்டு திருடர்கள் முயற்சி செய்து எடுத்தது போல் ஆங்காங்கே கதவுகளை உடைத்து விட்டு நகைகளை திருடி விட்டு மீண்டும் பூட்டை வைத்து பூட்டிவிட்டு சாவியை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடன் அதிகமாக இருந்த காரணத்தினால் நகைகள் அனைத்தையும் விற்று கடனையும் அடைத்துள்ளார்.
தற்போது போலீசார் விசாரணையில் இதனை ஒப்புக்கொண்டு உள்ளார். இது குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்கு பதிவு செய்து திருடப்பட்ட நகைகள் விற்ற கடைகளை பார்த்து நகையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


