தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து உற்பத்தியை துவக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் விபி ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக அரசுதான் அனுமதி தந்தது. இத்தருணத்தில் நக்சலைட்களும், மதவெறி அமைப்புகளும், மதமாற்ற கும்பல்களும் இந்த தேசத்தின் வளர்ச்சியை முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகத்தான் தீயசக்திகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களின் கைக்கூலிகளாக மக்களிடையே கேன்சர் நோய் அபாயம் மற்றும் ஒருவித உயிர் பயத்தை ஏற்படுத்தி நமது தூத்துக்குடி மக்களிடையே பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஆலைக்கு எதிராக திரட்டி தவறான வழிகாட்டுதளால் தூத்துக்குடியில் மிகப் பெரிய கலவரத்தை தூண்டி விட்டார்கள் என்ற உண்மை அறிவு சார்ந்த அனைவருக்கும் நன்கு தெரியும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி இணை இயக்குனர் அலுவகத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி காற்று மாசினால் புற்றுநோய் வரவில்லை என்றும் கர்ப்பப்பை மார்பகம் வாய் புற்றுநோய் போன்றவை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆலை மூடப்பட்ட பிறகும் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சமூக விரோத சக்திகள் ஒன்றிணைந்து இந்த கலவரத்தை நடத்தி அப்பாவி மக்களை இந்த கலவரத்திற்கு இறையாகி உள்ளனர். இதனால் ஆலைக்கு எதிராக மக்களை திசைதிருப்பி ஆலையை மூட செய்துவிட்டார்கள்.
திடீரென இந்த ஆலையை மூடி உற்பத்தியை முடங்கியதால் ஆலையை நம்பி பணிபுரிந்து வந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் ஆலையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த தொழில் ஒப்பந்ததாரர்கள், பொதுமக்களும் லாரி உரிமை மற்றும் போக்குவரத்து சார்ந்து பணி செய்து வந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலை முடக்கத்தால் வருவாய் இழந்த தொழிலாளர்கள் மற்றும் தொழில்முறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொது மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற அவர்களின் நலன்கருதியும், சீனா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து தாமிரம் இறக்குமதி செய்யப்படும் நிலையை மாற்றி நமக்கு தேவையான தாமிரத்தை நாமே உற்பத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றவும், வளமாக்குவதற்காகவும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து உற்பத்தியை துவக்கிட தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் நக்சலேட்டுகளும் மதமாற்ற கும்பல்களும் ஒன்றிணைந்து தேசவிரோத செயல்கள் நிகழ்த்துவதை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தேச விரோத சக்திகள் இன்னும் மக்களிடம் இந்த ஆலையை பற்றி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களை தூண்டுபவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தூத்துக்குடி மாவட்ட பொது மக்கள் பயன்பெற ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கும்படியும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


