“ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
எங்கள் ஊர் ராஜா தங்கமான ராஜா இவர்
எங்கள் ஊர் ராஜா தங்கமான ராஜா”
இன்ற பாடலை எங்கு கேட்டாலும் திருநெல்வேலி மாவட்டத்தினை பொறுத்தவரை சிங்கம் பட்டி ஜமீன்தாரின் நினைவு தான் வரும். இந்தியாவில் பட்டங்கட்டி கடைசி வரை வாழ்ந்த ஒரே ஒரு மகராஜா சிங்கம்பட்டி தீர்த்தபதி ராஜாதான்.
இவரை பற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன். இது என் வாழ்வில் எனக்கு கிடைத்து மிகப்பெரிய பிராப்தம். “சிங்கம்பட்டி ஜமீன் கதை” என்று நான் எழுதிய நூல் காவ்யா பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டது. அந்த நூல் வெளியிடும்போது சிங்கம்பட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி அய்யா அவர்கள் எனக்கு வெள்ளியால் அருமையான நினைவு பரிசு கொடுத்ததை என்னால் மறக்க இயலாது. ராஜா என்னை சிங்கம்பட்டி அரசவை கவிஞர் என புகழாரம் சூட்டினார். இது என்வாழ்வில் பெரும் பாக்கியம். அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். தற்போது ராஜா உயிரோடு இல்லை. ஆனால் அவர் நினைவலைகள் நம்மை சுற்றி தான் வருகிறது. அவருக்கு தமிழக அரசு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கவேண்டும் என்று என்னை போன்றவர்களின் கோரிக்கை விடுத்தே வருகிறோம்.
ஆடி அமாவாசை, சொரிமுத்து அய்யனார் கோயில் இவை இரண்டுமே ஒன்றை ஒன்று பிண்ணிப் பிணைந்தது.
ஆடி அமாவாசை என்றாலே சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெறும் திருவிழாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு மிகவும் சிறப்பு பெற்ற திருவிழா ஆடி அமாவாசை திருவிழா. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான கேமாரத்தாடிகள் பூக்குழி இறங்குவார்கள். அவர்கள், “ராஜா உத்தரவு ராஜா உத்தரவு” என ராஜ தர்பாரில் வீற்றிருக்கும் சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் உத்தரவு வாங்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.
சொரி முத்து அய்யனாரே இங்கே ராஜா ரூபத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பது ஐதீகம்.
இந்த பகுதியில் யாராவது ஒருவர் கனவில் சிங்கம்பட்டி ஜமீன்தார் வந்தால், மறுநாளே சொரி முத்து அய்யனார் கோயிலுக்கு ஓடோடி வந்து விடுவார்கள். அய்யனாரே கனவில் வந்த தங்களை அழைத்து செல்வதாக மக்களின் நம்பிக்கை.
ஆகவே தான் “எங்க ஊரு ராஜா தங்க மான ராஜா” என தீர்த்தபதி ராஜா முருகதாஸ் அவர்களை போற்றி புகழ்ந்து வந்தனர் பக்தர்கள்.
இந்த சொரிமுத்து அய்யனாருக்கு பல்வேறு சிறப்பு உண்டு. அந்த சிறப்புகளை முதலில் பட்டியலிடுவோம்.
பொருநை நதிக்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை இல்லாவிட்டால் அரசு அதிகாரிகளே இக்கோயில் அருகில் உள்ள தாமிரபரணியில் வேள்வியை நடத்துவார்கள். கடந்த 2003 ஆம் ஆண்டு ஜீன் மாதம் மழை இல்லாமல் போய் விட்டது. வற்றாதத் தாமிரபரணியில் தண்ணீர் வற்றிவிடுமோ என்ற கேள்வி குறியே ஏற்பட்டது. பல இடத்தில் மக்கள் வேள்வி நடத்தினார்கள். பொதிகை மலையில் சொரிமுத்து அய்யனார் கோயில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ராஜாராமன் தலைமையில் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா மற்றும் முக்கியப் பிரமுகர் கலந்து கொண்டு மிகப்பெரிய வேள்வி நடத்தினர். இந்த வேள்வி முடிந்தவுடனே மழை பெய்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்.
அருள் பொழிந்து மழை சொரிவதனால் சொரிமுத்து அய்யன் எனபெயர் பெற்றார் சொரிமுத்து அய்யனார்.
சொரிதல் என்பதைப் பொழிதல் என்று எடுத்துக் கொள்ளலாம். முத்து என்பதும் விலை மதிக்க முடியாதப் பெரும் பொருள் தான். மழையைக் கூட முத்து மழை என்றே கூறுவர். சொரிமுத்து அய்யனாரின் திருவருளும் விலை மதிக்க முடியாதுதான். எனவே இவரை வேண்டி நின்றால், விலை மதிக்க முடியாத திருவருளைப் பெற்று செல்லலாம்.
சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல லோயர் கேம்பில் இருந்து அப்பர் கேம்ப் செல்லும் வழியில் இடது புறம் செல்லும் ரோட்டில் திரும்பி, அங்குள்ள தாமிரபரணி ஆற்றைக் கடந்தால் கோயிலை அடையலாம்.
இந்தக் கோயிலில் கொட்டும் மழையில் ஆண்களும், பெண்களும், பாணதீர்த்தம் சென்று நீராடுவார்கள். பாணதீர்த்தம் செல்ல 1992 ஆம் ஆண்டு வரை சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து வாகனம் செல்வதற்கு சாலை வசதி இருந்தது. பாணதீர்த்தத்தில் குளித்து விட்டுத் தோளிலும், இடுப்பிலும், சிறு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். குடு, குடு என குளிரில் ஆடி வரும் முதியவர்களும் பாணதீர்த்தம் சென்று நீராடியே சொரிமுத்து அய்யனை வணங்கி நிற்பர். தற்போது இந்தச் சாலை அடைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் சிங்கம்பட்டியில் உள்ள கோயிலுக்கு சங்கிலி எடுத்து செல்ல சாமியாடிகள் இந்த பாதையைத்தான் ஒற்றையடி பாதையாக பயன்படுத்துகிறார்கள்.
நினைவுக்கு எட்டாத நாள்களிலே அகத்திய மாமுனிவர் தென்திசையில் பல தலங்களுக்குச் சென்று பொதிகை மலை செல்லும் போதெல்லாம் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ள இடத்தில் தங்கித்தான் செல்வார். ஒரு நாள் காலையில் தாமிரபரணியில் ஸ்நானம் செய்து முடித்தார். அங்கேயே அமர்ந்து தியானமும் செய்தார். இரவில் அவர் நித்திரை அடையும் போது அங்கு ஜோதி தோன்றியது. அதைக் கண்டு அதிசயித்துப் போன அகத்தியர் தனது ஞான திருஷ்டியால் ஆராய்ந்தார். உலக மாதவராகிய பிரம்ம ராட்சசி, பேச்சி முதலிய எல்லா மூர்த்திகளுடன் சாஸ்தாவானவர் இந்த இடத்தில் தோன்றி மகாலிங்கத்தினைப் பூஜை செய்து தியானத்தில் ஆழ்ந்தனர். அந்த நாள் ஆடி அமாவாசை நாள். அகத்தியர் ஆனந்தமாகப் புஷ்பம் சொரிய அவர்களைத் தரிசித்துப் பிராத்தனை செய்தார். அந்நாள் முதல் இவ்விடம் பிரசித்திப் பெற்ற இடமாக மாறியது.
ஆடி அமாவாசை நாளில் இத்தீர்த்தக்கட்டத்தில் யார் ஒருவர் ஸ்நானம் செய்து இங்குள்ள மூர்த்திகளை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா இன்னல்களும் நெருப்பில் பட்ட பஞ்சு போல நாசம் அடைந்து விடும். புத்திரப் பாக்கியத்துடன் அனைத்து ஐஸ்வரியங்களும் கிடைத்து விடும். இந்த வரத்தினைஅகத்தியர் சாஸ்தாவிடம் பெற்றார்.
அச் சமயம் தேவர்கள் வான் முகட்டில் இருந்து மலர் மாரி பொழிய ஆரம்பித்தனர் அன்று முதல் சொரிமுத்து அய்யனார் என்ற பெயர் இக்கோவிலுக்கு வழங்கப்பட்டது.
அகத்தியப் பெருமான் தரிசித்தப் பின் அவ்விடத்தில் கூட்டுறவு தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்தார். மகாலிங்கம், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசல் பூதம், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பாதாளபூதம், கரடி மாடன், பிரம்ம ராட்சசி, பேச்சி, சுடலைமாடன், கருப்பன், கருப்பி, தளவாய் மாடன், தூண்டில் மாடன், பட்டவராயர், முதலான பல தெய்வங்களுடன் காட்சிக் கொடுத்து மறைந்தார். அகத்தியர் காலத்திற்குப் பிறகு கால தேவனின் கொடுமையினால் மகாலிங்கம் சுவாமி , சொரிமுத்து அய்யனார் மற்றும் பரிவார தேவதைகளின் இருப்பிடம் சுவடு தெரியாமல் போய்விட்டது. ஆனாலும் இவ்வுலகத்தினை உய்விக்க வேண்டுமே. அதற்காக அதிசயம் ஒன்றைச் செய்தார் அய்யன்.
பாண்டிய நாட்டில் இருந்து சேரநாட்டுக்கு மாட்டு வண்டியில் பண்டமாற்றம் செய்து வந்தக் காலம் அது. பொதிகை மலையில் பாபநாசத்தில் இருந்து சங்குமுத்திரைக்கு மாட்டு வண்டியில் வியாபாரிகள் சென்று வருவார்கள். கள்ளர்கள் பயத்தினால் மாட்டு வண்டிகளில் வியாபாரிகள் கூட்டாகச் சேர்ந்து தான் சென்று வருவார்கள்.
ஒரு முறை கூட்டமாக மாட்டு வண்டிகள் வரும்போது, கல்லொன்றில் மோதி வண்டி நின்றது. அப்போது அந்தக் கல்லில் ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. வண்டிகாரர் ‘அய்யோ’ என்று ஓலமிட்டார். சத்தம் கேட்டு அனைத்து வண்டிகளும் நின்றன. அனைவரும் அதிர்ந்து நின்றனர். ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கல்லைப் பார்த்து, என்னச் செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றனர்.
அப்போது வானத்தில் அசரிரீ சத்தம் கேட்டது. “இந்த இடம் அகத்திய மாமுனிவர் ஞான திருஷ்டி மூலம் அறிந்த, மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் புடைசூழ வாழும் இடம். ஆகவே தற்சமயம் இங்கு ஆகமவிதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும். அப்படி செய்தால் இந்த இடம் மிகச் சிறப்பானப் புண்ணிய இடமாகப் புகழப்படும். நீங்களும் சிறப்பு பெறுவீர்கள்” என்று கூறியது.
திருவருள் ஆணையைச் சிரமேற்கொண்டு அவர்கள் பணியைத் துவங்க ஆரம்பித்தனர். சிவநேசச் செல்வர்களும் பக்தக் கோடிகளும் புலவர்களும் பல திருப்பணிகளைச் செய்ய உதவினர். தற்போதுள்ள கோயில் அதன் பிறகே உருவானது.
இந்தப் பகுதி மிகப்பெரியக் காட்டுப்பகுதி. அதிகமானக் கொடிய வனவிலங்குகள் இங்குள்ளது. திருவிழா நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானப் பக்தர்கள் கூடுகிறார்கள். ஆனால் இது வரை இங்கு வரும் பக்தர்களை எந்த விஷ சந்துகளும் தீண்டியதாகவும், அதனால் ரணப்பட்டதாகவும், உயிரை இழந்ததாகவும் சரித்திரம் கிடையாது. சொரிமுத்து அய்யனாரின் அருளை என்னவென்று கூறுவது.
இந்த ஆலயம் சிங்கம்பட்டி ஜமீன்தார் ஆளுகைக்குள் வந்த வரலாறு மிகவும் மிகச்சிறப்பானது.
சேர நாட்டில் பத்மநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் சேரன் மார்த்தாண்டவர்ம மன்னன். இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். எனவே இளம் வயதிலேயே ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விட்டார். ஆயினும் இளமையில் பொறுப்புக்கு வந்தக் காரணத்தால் உறவினர்களின் வெறுப்புக்கு ஆளாகி அவர்களின் சூழ்ச்சியால் அரசு பதவியை இழந்து விட்டார். காட்டுக்குள் ஓடிப் போய் உயிர் பிழைத்தார்.
சேர மன்னரின் உறவினர்கள் விட்ட பாடில்லை. இவரைத் துரத்திக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் சேர மன்னன் சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியில் வந்து ஒளிந்துக் கொண்டார். அப்போது சிங்கம்பட்டி பாளையக்காரர்கள் நட்பு சேர மன்னருக்கு கிடைத்தது. ஜமீன்தார் சேர மன்னனை நன்றாகப் பராமரித்து வளர்த்தார். அவருக்கு பலவித வித்தைகள் கற்றுக் கொடுத்தார். பிற்காலத்தில் சேர மன்னன் வாலிபராக மாறினார். இழந்த அரசை மீட்கத் தயாரானார்.
சேர மன்னருக்கும் உறவினருக்கும் பெரிய போர் மூண்டது. சேரமன்னருக்கு உதவியாகச் சிங்கம்பட்டி பாளையக்காரர்களும் தன் வசம் இருந்த 2 குதிரைப்படைத் தளபதிகளைத் தனது மூத்த வாரிசான இளவரசனையும் அனுப்பி வைத்தனர். அவர்களின் உதவியுடன் சேரன் போரிட்டு உறவினர்களை ஓட ஓட விரட்டி,வெற்றிவாகை சூடினார்.
இந்தப் போரில் வேல்வீச்சில் திறன் கொண்ட சிங்கம்பட்டி பாளையக்கார இளவரசன் இறந்துவிட்டார். இளவரசருக்கு ‘ நல்ல குத்தி’ என்ற சிறப்பு பட்டத்தை வழங்கி, மேற்கு தொடர்ச்சி மலையில் தற்சமயம் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் உட்பட 80,000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவைச் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குத் தானமாகக் கொடுத்து விட்டார் சேரமன்னர். இதனால் தான் இந்த மலைச்சரிவில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் சிங்கம்பட்டி ஜமீன்தார் நிர்வாகத்திற்கு வந்தது. இந்த இடத்துக்குள் பல தீர்த்தங்கள்( பாணதீர்த்தம், கல்யாணதீர்த்தம், அகத்தியர் தீர்த்தம்) வந்தக் காரணத்தினாலும், இந்தத் தீர்த்தங்களுக்கெல்லாம் அதிபதியாக சிங்கம்பட்டியார் ஆனக் காரணத்தினால் சிருங்கேரி சுவாமிகள் இவருக்குத் தீர்த்தபதி என்ற அடைமொழியைக் கொடுத்தார்.
தீர்த்தபதி ராஜாக்கள் தொடர்ந்து நற்பணிகளை செய்து வருகிறார்கள். தற்போதும் அம்பாசமுத்திரத்தில் தீர்த்தபதி மருத்துவமனை, தீர்த்தபதி பள்ளி என அவர்கள் பெயரில் சிறப்புற இயங்கி வருவதை நாம் காணலாம்.
இந்த தீர்த்தபதி ராஜாவின் அரசாட்சித்தான் ஆடி அமாவாசை அன்று சொரிமுத்து அய்யனார் கோயிலில் மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த அருமையான நிகழ்ச்சியைதான் தொடர்ந்து நாம் காணப் போகிறோம்.
(பொருநை ரகசியத்தினை தேடிபயணிப்போம்)


