தென்திருப்பேரை அருகே மோட்டார் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகிலுள்ள நாலுமாவடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராஜேந்திரன் (54). மெக்கானிக். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தீசன் மகன் ராஜலிங்கம் என்பவரும் நேற்று முன்தினம் இரவு நெல்லையில் இருந்து நாலுமாவடிக்கு மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
இரவு 9.30 மணியளவில் தென்திருப்பேரை அடுத்துள்ள கேம்பலாபாத் அருகே சென்றபோது, திருச்செந்தூரில் இருந்து வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜலிங்கம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


