என் எழுத்து துறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வுக்குக் காரணம் திருவாளர் சேகர் ஜி மனோகர் அவர்கள். மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் கூட விளையாட்டுத் துறை, கலைத்துறை, எழுத்துமுறையில் மிகவும் ஆர்வம் கொண்டவர். தற்போது தமிழ்நாடு ஹாக்கி தலைவராகவும், உலக களரி அடிமுறை கூட்டமைப்பின் இணை நிறுவனராக இருந்து பணியாற்றி வருகிறார். தமிழக கலையாம் களரியை சுமார் 25 நாடுகளுக்குக் கொண்டுசென்றவர், ஹாக்கியில் தமிழக வீரர்கள் பலரை இந்திய அணியில் உருவாக்கியவர்.
இவர்தான் என்னை உருவாக்கியவர். 5 வருடத்துக்கு முன்பு மிகப்பிரபலமாக நாங்கள் இருவரும் உருவாக்கிய கலெண்டர் மக்கள் மத்தியில் பிரபலமானது. அதுபோலவே அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு வரும் உலக களரி அடிமுறை கூட்டமைப்பின் சார்பில் என்னை எழுத்தாளராக அறிமுகம் செய்து மிகப்பிரமாண்டமான வண்ணத்தில் என்னுடைய களரி அடிமுறை -1 என்ற நூல் வெளியாகத் தயாராக உள்ளது. மேலும் இரண்டு பாகம் வெளிவர தயாராக உள்ளது. இவரது அறிமுகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ரத்தினகுமார் (உலக களரி அடிமுறை கூட்டைப்பு நிறுவனர்) தொடர்பு கிடைத்தது. அவர் எனது கட்டுரையை நியூயார்க் தமிழ்ச்சங்க பொன்விழா மலரில் இடம்பெறச்செய்தார்.
தாமிரபரணி கரையில் மட்டுமே பயணித்த எனக்கு உலக அளவில் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த திருவாளர் சேகர் ஜி மனோகர் அய்யா எனக்கு ஐந்து வருடப் பழக்கம். ஆனால் நேரில் பார்த்ததே இல்லை. நேற்று தூத்துக்குடி நெய்தல் துவக்க விழாவில் அய்யாவை அவரது குடும்பத்தோடு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் இசையமைப்பாளர் நண்பர் இசக்கியப்பன் அவர்களோடு அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தோம். தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி ஹாக்கி மைதானத்தில் கடந்த மாதம் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்திய கையோடு நெய்தல் கலை விழாவிலும் தனது பங்கை அளித்துள்ளார். நன்றி. அய்யா. தூத்துக்குடி மாவட்டம் சார்பில் உங்களை வரவேற்கிறோம். அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


