தூத்துக்குடியில் 4 நாட்கள் நடைபெறும் பாரம்பரியமிக்க நெய்தல் கலைவிழா இன்று மாலை கோலாகலமாகத் தொடங்கியது.

தமிழகத்தின் தனித்துவத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், ஸ்பிக் நிறுவனமும் இணைந்து ‘நெய்தல்- தூத்துக்குடி கலை விழா’ என்ற விழாவை நடத்துகிறது. இந்த விழாவானது இன்று (ஜூலை) 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் வைத்து நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கலை விழா நடக்கிறது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து 300 கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு குழுக்களாக கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்த கலை விழாவில் உணவுத்திருவிழாவும் நடத்தப்படுகிறது. இதற்காக சுமார் 20 உணவு சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

நெய்தல் கலைவிழா வின் முதல் நாளான இன்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு நெய்தல் கலைவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, முன்னாள் அமைச்சர் தமிழரசி, எஸ்பி பாலாஜி சரவணன், ஆணையர் சாரு ஸ்ரீ, ஸ்பிக் நிறுவனத்தின் இயக்குனர் ராமகிருஷ்ணன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கண்ணபிரான், துணை மேயர் ஜெனிட்ட செல்வராஜ், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் செய்து இருந்தது.


