பெங்களூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி விற்பனை செய்து வருவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தூத்துக்குடி ஏஎஸ்பி சந்தீஸ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை போலிசார் கடந்த ஒரு வார காலமாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று பெங்களூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த ஒரு டாடா ஏசி வாகனத்தை இந்த தனிப்படையினர் வல்லநாடு அருகே உள்ள தெய்வச்செயல்புரம் நான்குவழிச்சாலையில் மடக்கி சோதனை செய்தனர். இதில் 55 மூட்டையில் 850 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் இந்த போதை பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் போலிசார் பறிமுதல் செய்தனர். இந்த போதை பொருட்கள் இன்று மட்டும் விற்பனை செய்த ரூபாய் 3 லட்சத்து 70 ஆயிரத்தை போலிசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த ஜாண்சன் மகன் அருள்ராஜ்(35), வெங்கடேஷ் மகன் செல்வம், ஜெமில் மகன் வசீம்(34), திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் காளிமுத்து(34) ஆகிய 4 பேரையும் போலிசார் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் 4 பேரையும் கைது செய்து முறப்பநாடு காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று இரவு அல்லது நாளை 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்க உள்ளனர்.


