thanks thamban ji
நெல்லையில் பாளையங்கோட்டை எஸ்.பி அலுவலகம் அருகில் அருங்காட்சியகம் ஒன்றுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் காப்பாட்சியராக சிவசக்தி வள்ளி உள்ளார். இவர் நெல்லை அருங்காட்சியகத்தினை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் என கூறலாம். குறிப்பாக நெல்லையில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது என்பது இந்த பகுதி மக்களுக்கு தெரிய காரணமே சிவசக்தி வள்ளி அவர்கள்தான். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது. கல்லூரி மாணவ மாணவிகளை அழைத்து வந்து போட்டிகள் நடத்துவது. ஒவ்வொரு நிகழ்வுகளையும் நினைவு படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்துவது. திறந்த வெளி பொது மேடை உருவாக்க காரணமாக இருந்தது. அங்கு ஒவ்வொரு வாரமும் பொது இலக்கிய நிகழ்ச்சி நடத்துவது. நெல்லை, தூத்துக்குடி தென்காசி மாவட்டத்தில் கிடைத்த சிலைகள் மற்றும் வித்தியாசமான பொருள்களை காட்சி படுத்துவது என மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை பாராட்டி விட்டு இந்த பகுதிக்குள் செல்வோம்.
தற்போது ஆதிச்சநல்லூர் ,சிவகளை , கொற்கை தொல்லியல் தளங்கள் பிரபலமாகி உள்ளது. ஆனால் சுமார் 6 வருடங்களுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் பொருள்களை காணவேண்டும் என்றால் நாம் நெல்லை அருங்காட்சியகத்துக்குத்தான் செல்லவேண்டும். அல்லது சென்னையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு த்தான் செல்லவேண்டும். ஆதிச்சநல்லூர் மட்டுமல்லாமல் பல்வேறு பொருள்களை காட்சி படுத்தி இருப்பார்கள். காணிகள் முதலில் ஆடையின்றி இருந்தார்கள். மர உரியை ஆடைகளாகத் தரித்தார்கள். அதன் பின் காட்டில் விலங்குகளை வேட்டையாடினார்கள். விலங்குகளின் தோல்களைப் பதப்படுத்தி அதை ஆடைகளாக அணிந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா? இதில் இடுப்பில் கட்டப்படும் ஆடை, தலையில் கட்டும் தலைப் பாகை ஆகியவை நெல்லை அருங்காட்சியகத்தில் தற்போதும் கூட மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த படங்கள் இந்த பக்கத்தில் பிரசுரமாகி உள்ளது.
அதுபோக ஊமைத்துரை அடைத்து வைககபட்ட ஜெயிலும் இந்த அருங்காட்சியகத்துக்குள் உள்ளது. 16 ஆம் நூற்றாண்டு பாளையங்கோட்டையின் எஞ்ஞிய மதில் சுவர் என்றே இந்த அருங்காட்சியகத்தினை கூறுவார்கள்.
காணி இனத்தவர்களின் குணநலன்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
பொதிகை மலையில் வசிக்கும் காணி பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமானதாகும். ஆண் பெண் காதலித்தால் அவர்களுக்கு தண்டனையே மிகக் கொடுமையாக நடைபெறும். இருவரையும் மொட்டையடித்து பொது இடத்தில் வைப்பார்கள். அதன்பின் அவர்கள் முன்பு ஒரு தட்டில் சாப்பாட்டை வைப்பார்கள். அதில் அனைவரும் எச்சிலைத் துப்பச் சொல்வார்கள். அதன்பின் அந்த ஆணையும் பெண்ணையும் சாப்பிடச் சொல்வார்களாம். அந்த அளவுக்குக் காதலுக்குக் கடுமையான தண்டனை காணிகள் மத்தியில் நடைபெறும்.
இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடந்தது. ஆனால் தொடர்ந்து வந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் காணிகள் இனத்துடன் சென்று பழகி அவர்களை சமதானப்படுத்தி வருகிறார்கள். ஆகவே கொடுமையான தண்டனைகள் கொடுப்பது குறைந்து உள்ளது. ஆனாலும் அவர்களின் இயல்பு வாழ்ககை என்பது அப்படியே தான் உள்ளது.
இவர்களின் தலைவன் மூட்டுக்காணி என்று அழைக்கப்படுவார். வைத்தியம் செய்பவர்களைப் பிலாத்தி என்றும் அழைப்பார்கள். மூலிகையை வைத்து மிக அருமையான வைத்தியங்களைச் செய்யத் தெரிந்தவர்கள் இவர்கள். பெண்கள் வயதுக்கு வந்தால் அவர்களைத் தனி குடிலில் வைத்து விடுவார்கள். பின் உரிய சடங்கு முடிந்தவுடன் அந்தக் குடிலை எரித்து விடுவார்கள். மேலும் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் தனியாக இருக்க வைப்பார்கள். அது மட்டுமல்லாமல் தோட்ட வேலை செய்யும் போது மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களைப் பிலாத்தியிடம் கூட்டிச் சென்று மந்திரித்து விடுவார்கள். அதுபோலத் தேன் எடுக்கச் செல்லும்போது அவர்கள் எதையாவது பார்த்துப் பயந்து விட்டால், பிலாத்தியிடம் தான் மருத்துவம் செய்வார்கள்.
தற்போது இவர்கள் வாழ்க்கை முறையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது; ஆனாலும் கூட பல பழமைகளை இவர்கள் மறப்பதில்லை. அதில் ஒன்று கோக்ரா இசைக்கருவி. ஆதியில் இவர்கள் தங்களது குல தெய்வத்தினைக் கும்பிடும் போதும், விழாக்காலங்களைக் கொண்டாடும்போதும் வித்தியாசமான இசைக்கருவி ஒன்றை இசைப்பார்கள். அந்த இசைக்கருவிக்குப் பெயர்தான் கோக்ரா இசைக் கருவி. இந்த இசைக்கருவிகளை அவர்கள் இசைக்கும் முறையே வித்தியாசமாக இருக்கும். இந்த இசையோடு அவர்கள் பாடும் பாடல் கேட்க இனிமையாக இருக்கும். ஆனால் நமக்கு புரியாது. தற்போதும் விழாக்காலங்களில் பொதிகை மலை சென்றால் நாம் அந்த இசையைக் கேட்கலாம்.
இவர்கள் ஒரு காலத்தில் அடர்ந்த காட்டுக்குள் வாழ்ந்தாலும் சுத்தம் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஆடையில்லாமல் வாழ்ந்து, மர உரி தரித்துத் தொடர்ந்து தற்போது நூலாடை அணியும் வகையில் நாகரிகம் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆகவே இவர்கள் அடர்ந்த காட்டை விட்டு கீழே இறங்கி வந்து விட்டனர். பல குடியிருப்பு மின்சாரம் உள்படப் வசதிகளைப் பல பெற்று விட்டது. சில பகுதியில் மின்சாரம் மற்றும் சாலை வசதியில்லை. இவர்கள் குடிசை வீட்டில்தான் வசிக்கிறார்கள். இயற்கையைப் பாதுகாப்பாக வைத்து வாழும் இவர்களுக்குக் காட்டு மிருகங்கள் நண்பர்கள்.
இவர்கள் தங்களது குழந்தைகளை நடைபயிலச் செய்வதே வித்தியாசமாக இருக்கிறது. அதை வசந்த தொலைககாட்சி படப்பிடிப்புக்கு சென்ற போது நான் அறிந்திருந்தேன். தற்போது நாம் பல நூறு ரூபாய்க்கு பிளாஸ்டிக் வண்டி வாங்கி அதன் மூலம் குழந்தைகளை நடைபயிலச் செய்கிறோம். வசதியில்லாதவர்கள் கட்டை தள்ளு மூலம் குழந்தையை நடைபயிலச் செய்கின்றனர். ஆனால் காணி இன மக்கள் தங்கள் குடிசை வீட்டுக்கு முன்பே குழந்தை கீழே விழாமல் இருக்கக் கவுண்டர் போன்ற ஒரு அமைப்பை மூங்கில் மட்டை மற்றும் கம்பு மூலம் உருவாக்கி அதில் குழந்தைகளை நடைபயிலச் செய்கிறார்கள்.
அந்த அமைப்புகளில் குழந்தையை விளையாட விட்டுவிட்டு மற்ற வேலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் குழந்தை நடைபயில இயற்கையாகச் செய்யும் இந்தச் செயல் அவர்களின் அறிவுத் திறனுக்கு உதாரணமாகத் திகழ்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது.
தற்போது இந்தக் காணி இனத்தவரின் பெண்கள் கல்வி யறிவில் முன்னேறி உள்ளனர். நாங்கள் சேர்வலாறு அருகில் உள்ள காணிக் குடியிருப்புக்குச் சென்ற போது அங்கு ஒரு பெண், தான் கல்லூரி படிக்கச் செல்வதாகவும், உரிய அரசு ஒதுக்கீடு சான்றிதழ்கள் கிடைத்தால் அரசு வேலைக்குச் சென்று விடுவேன் என்றும் எங்களிடம் கூறினார். அநேகமாக அந்த பெண் தற்போது அரசு வேலை இருந்தாலும் இருக்கலாம்.
காடுகளில் வழிகாட்ட மற்றும் காடுகளைப் பாதுகாக்க வனத்துறையினர் காணிகளை வேட்டை தடுப்புப் பணிகளுக்குப் பணி அமர்த்தி உள்ளனர். காடுகளை பற்றி நன்கு அறிந்து இருப்பதால் அவர்கள் அந்த பணியை செவ்வன செய்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அவர்களின் காணி மக்கள் பற்றிய மூன்றாவது வீடியோ “காணி இன மக்களின் பாரம்பரியமும் சமூக நடைமுறைகளை” பற்றியும் உள்ளது. இவர்கள் வாழும் நிலப்பரப்பு தனித்துவம் பராம்பரியம் நிறைந்தது. இவர்கள் தமிழ் மொழியே மிக வித்தியாசமாக பேசுகிறார்கள். டாக்டர் கால்வெல் காணிகளே தமிழர்களின் முன்னோடி என்கிறார் . ஆனால் தற்போது உள்ள காணிகள் பேசும் மொழியில் மலையாளம் மிக அதிகமாக கலந்து உள்ளது. பொதிகை காணிகள் பேசும் மொழி வித்தியாசமான தமிழ் மொழியாகவே விளங்குகிறது. நாம் ஏற்கனவே கூறிய படியே மூட்டுகாணி என்னும் தலைவனின் முக்கியத்துவமும், பிலாத்தி என்னும் மருத்துவரின் கடமையையும் மிகச்சிறப்பாக படம் பிடித்து இந்த வீடியோவில் காட்டியுள்ளார்கள்.
ஒரு பெண் பூய்படைந்து விட்டாள். அவளுக்கு சடங்கு செய்யும் நிகழ்ச்சி மிக வித்தியாசமானது. அதை படம்பிடித்து காட்டியுள்ளார்கள். பெண்ணை அழைத்து வந்து தண்ணீர் ஊற்றி மலர் செடி கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட குடிலின் கீழே வைத்து வயதான பெண்கள் தண்ணீர் ஊற்றுகிறார்கள். அதன் பின் அந்த பெண் அந்த குடிலை பிரித்துக்கொண்டு வெளியே வரும் காட்சி சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பெண்ணை மயில் தோகையால் அலங்கரித்து, தழைகளை போர்த்தி அழைத்து வந்து ஒரு குடிசையில் வைத்து முகத்துக்கு வண்ணம் தீட்டி திரளி என்னும் வாழ்த்து பாட்டு பாடி முதியவர்கள் ஆசிர்வாதம் செய்யும் அற்புத காட்சிகள் பிரமாதமாக படம் பிடிக்கப்பட்டுட்டுள்ளது.
காணி இனமக்கள் திருமணம் என்றால் உறவினர்கள் ஒன்று கூடி பெண் கேட்க செல்வார்கள். அங்கு உறவினர்களிடம் பெண் கேட்பார்கள். அவர்கள் சம்மதம் கிடைத்த பின், பெண் மற்றும் மாப்பிள்ளையிடம் சம்மதம் கேட்பார்கள் . அதன் பின் தட்டு மாற்றிக் கொள்வார்கள். மூட்டுகாணி மூலம் மற்ற குடியிருப்பு மூட்டு காணிக்கு படர் கொடியை கொடுத்து அழைப்பு விடுவார்கள். அதன் பின் திருமணம் நடைபெறும். அதன் பின் 7 நாள்கள் அவர்களை சேர்ந்திருக்க அனுமதிக்கமாட்டார்கள். பெண் கேட்கும் படலம், பெண் மாப்பிள்ளையிடம் சம்மதம் கேட்கும் படலம், தட்டு மாற்றுவது. மூட்டு காணியிடம் அழைப்பு கொடுப்பது, திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் நடப்பது உள்பட காட்சிகளை மிக தத்துருவமாக காட்சி படுத்தியிருக்கிறது இந்த ஆவணப்படும்.
சில நேரங்கள் பொதிகை மலையில் மழை பொய்த்து விட்டால், சிறப்பு சடங்கு நடைபெறும் இதற்காக பாணதீர்த்தம் அருகில் இரவில் தங்கி பெரியவர்கள் மழை சாற்று பாடல் இசைக்கிறார்கள். இரவு முழுவதும் கோக்ரா இசையில் மழை சாற்று பாடல் பாடிய பின் காலையில் பொங்கல் வைக்கிறார்கள். அதன் பின் மழை கடவுளை திருப்தி படுத்தி வேண்டுதல் வைக்கிறார்கள். அதே வேளையில் பெண்கள் ஒரு சிறுமியை தேர்ந்தெடுத்து தாமிரபரணி கரையில் கரையான் புற்றை தேர்ந்தெடுத்து அதன் மீது அவரை அமரவைத்து புற்று நனைந்து கரையும் வரை அந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றுகிறார்கள்.
அதன் பின் அடுத்து வாரமே மழை பெய்யும் என்பது ஐதீகம். இந்த நிகழ்ச்சியை இந்த ஆவணப்படத்தில் மிகச்சிறப்பாக காட்சி படுத்தியுள்ளார்கள். பார்க்கும் போதே சிலிர்ப்பாக உள்ளது.
ஒருவர் இறந்த பின் அந்த இறப்பை ஒவ்வொரு குடியிருப்பில் உள்ள மூட்டுகாணியிடம் படர் கொடியில் ஒரு முடிச்சி போட்டு அவிழ்ப்பது மூலம் தெரிவிப்பார்கள். இறந்த மனிதரை ஒரு மரத்தின் அடியில் புதைப்பார்கள். அதன் பின் சுமார் 1 வாரம் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். துக்கம் அனுசரித்து இறந்தவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
ஏற்கனவே காதல் செய்தால் தண்டனை என்று கூறியிருந்தோம். இதுபோன்று களவு செய்தவர்களுக்கும் கடும் தண்டனை உண்டு. குறிப்பாக குற்றம் விளைவித்தவர், திருட்டு தொழில் செய்தவர்கள் கூட்டி கொண்டு வந்து அவருக்கு தண்டனை கொடுத்து அவரை குனிய வைத்து கல்லை தூக்கி முதுகில் வைத்து தண்டனை கொடுப்பார்கள். இந்த தண்டனைக்கு குனிய கல் என்று பெயர். இந்த தண்டனை கொடுக்கும் முன்பே அவர் குற்றவாளிதானா? அவருக்கு தண்டனை கொடுக்கலாமா? எல்லோரிடமும் சம்மதம் கேட்டே தண்டனை கொடுப்பார்கள்.
இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் மிகச்சிறப்பாக காட்சி படுத்தியிருக்கிறது இந்த வீடியோ.
அதோடு மட்டுமல்லாமல்
காணிகள் கட்டிய மரப்பாலம் ஒன்று வித்தியாசமாக உள்ளது. இந்த மரப்பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டது என்பதை நம்ப முடியுமா?. அதற்குள்ளும் பல வரலாறு ஒளிந்து கிடக்கிறது.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


