ஒலிம்பியாட் சதுரங்க போட்டியில் பார்வையாளாராக பங்கேற்க உள்ள மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்ட காமராஜ் கல்லூரியில் 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டியில் பார்வையாளாராக பங்கேற்க உள்ள மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பரிசுகளை வழங்கி பாராட்டி பேசியதாவது: 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டி சென்னையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் தமிழகம் அதிக செஸ் மாஸ்டர்களை கொண்டுள்ளது. குறிப்பாக விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக உள்ளார்.
செஸ் போட்டியில் தமிழக மாணவர்கள் பெருமையை பறைசாற்றிக கொண்டிருக்கிறார்கள். செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டியில் பார்வையாளாராக கலந்து கொள்வார்கள். அதற்கான போட்டி காமராஜ் கல்லூரியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நமது தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர். படிப்பிலும், விளையாட்டு போட்டியிலும் மாணவர்கள் சாதிப்பதற்கு பெற்றோரின் பங்கு முக்கியமானது ஆகும். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து அவற்றில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வசதிகளை செய்துள்ளது. ஒவ்வொரு போட்டியையும் அரசு ஊக்குவிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதியில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானம் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஹாக்கி போட்டியில் நிறைய பேர் சிறந்து விளங்குகிறார்கள். அகில இந்திய போட்டி கோவில்பட்டியில் 2 முறை நடத்தியிருக்கிறார்கள்.
காயல்பட்டிணயத்தில் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பேசினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், சதுரங்க சம்மேளன தலைவர் ஜி.பி.ஜோபிரகாஷ், செயலாளர் ஜிம் ரீவ்ஸ் சைலன்ட் நைட், காமராஜ் கல்லூரி முதல்வர் முரளிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


