சாத்தான்குளம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 3½ பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் தவசிமணி மனைவி தாமரை புஷ்பம் (65). இவர்களுக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். கணவன் மனைவி மட்டும் கிராமத்தில் தனது வீட்டில் வசித்து வந்தனர். தவசிமணி என்பவர் கூலி தொழிலாளி. நேற்று இரவு 9 மணிக்கு தனது வீட்டில் தாமரை புஷ்பம் வீட்டின் வாசல் அருகில் கட்டிலில் படுத்திருந்தார்.
அப்போது அங்குவந்த மர்ம ஆசாமி தாமரை புஷ்பம் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கத் தாலி செயினை பறிக்க முயன்றான். அவர் தடுக்கவே மர்ம நபர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு தாலிச் செயினை பறித்துச் சென்றுவிட்டான். இவருடைய கணவர் திருமண வீட்டுக்கு போய் விட்டதால் வீட்டில் தாமரை புஷ்பம் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு மர்ம ஆசாமி தனது கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தாமரை புஷ்பம் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.


