ஸ்ரீவைகுண்டம் அருகே அடிப்படை பயிற்சிக்கு வருகை தந்த மாற்றுத்திறனாளி வார்டு உறுப்பினரை கூட்ட அரங்கிற்குள்ள அனுமதிக்காமல் 3 மணி நேரம் வாசலில் காக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் என்றாலே அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலையில் தான் தற்போது உள்ளார். குறிப்பாக பேருந்து பயணங்களின் போது அவர்கள் அவமதிக்கப்படுகிறார். இப்படி ஒரு சம்பவம் தான் இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தின் கீழ் 31 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த 20ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை வார்டு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் 5 கிராமங்களாக இந்த பயிற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமானுஜம்புதூர், தெற்கு காரசேரி, வல்லகுளம், கால்வாய், சேரகுளம் ஆகிய 5 கிராம ஊராட்சிகளுக்கு இன்றும் நாளையும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கு கிராம ஊராட்சி செயலர்கள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக இந்த கூட்டத்திற்கு ஐந்து கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் வருகை தந்தனர். கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த 1 வது வார்டு உறுப்பினர் மணி மந்திரம் என்ற மாற்றுத்திறனாளியும் வருகை தந்தார்.
அங்கு வருகை தந்த அவரை அங்கிருந்த கிராம செயலர் ஒருவர் வருகை பதிவேடு நோட்டையும், பேனாவையும் கொண்டு வாசலுக்கு சென்று அவரிடம் கையெழுத்திட்டு நீங்கள் வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் நான் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்துள்ளேன். கையெழுத்து மட்டும் வந்து இட வேண்டும் என்றால் நான் வீட்டில் இருக்கும் போதே வந்து வாங்கியிருக்கலாமே என்று கேட்டுள்ளார். ஆனால் அந்த செயலர் அதனை கேட்டுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் எந்த அதிகாரிகளும் அதுகுறித்து பேசவில்லை. மேலும் அவர் தான் கூட்டத்திற்கு செல்ல சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அவரை உள்ளே அனுமதிக்காத நிலையில் அவர் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் வாசலிலேயே காத்திருந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் அவரிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அவருக்கு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் ஆய்வுக் கூட்டத்திற்கு சென்றார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி மணி மந்திரம் கூறும்போது, என்னிடம் நாளை கூட்டம் நடைபெறுகிறது என்று செயலர் தெரிவித்திருந்தார். அவரிடம் நான் ஊனமுற்றவன். நான் கூட்டத்திற்கு வருகை தரவும், அலுவலகத்திற்குள் செல்வதற்கு எனக்கு சக்கர நாற்காலி ஒன்று ஏற்பாடு செய்து தாருங்கள் என்று தெரிவித்திருந்தேன். இந்த நிலையில் இன்று காலை அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால் அவர் என்னிடம் கையெழுத்திட்டு நீங்கள் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். மேலும் அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்வதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாசலிலேயே காத்திருந்தேன். இனி இதுபோல் சம்பவம் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாமும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன் கூறுகையில், இதுபோல் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை முறையாக கவனித்து மாற்றுத்திறனாளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி வார்டு உறுப்பினர் ஒருவரை ஆய்வுக்கூட்டத்திற்கு அனுமதிக்காத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


