தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 3ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு எண். 17, நாள்: 31.08.2021இன்படி “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது 2022-2023ஆம் நிதியாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி 03.06.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன. பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் தெரிவு செய்து அனுப்புவார். கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000- இரண்டாம் பரிசு ரூ.3000- மூன்றாம் பரிசு ரூ.2000- வீதம் வழங்கப்பெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


