பிரபல எழுத்தாளர் சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தன்னுடைய வெளவால் தேசம் நாவலில் தாமிரபரணி கரை வரலாற்றை நிறைய இடத்திடில் பேசியுள்ளார்.
அதில் நான் பிறந்த ஊரான முத்தாலங்குறிச்சி கந்தசாமி புலவர் வரலாற்றை மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். அதைப்பற்றித்தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக் கிறோம்.
‘வாட்… கண் கட்டபொம்மன் கொடுத்தானா? நாளை காலை கந்தசாமிப் புலவரின் இரண்டு கண்களையும் தோண்டி எடுத்து விடுங்கள், கட்டபொம்மன் வந்து கண் கொடுக்கிறானா என்று பார்ப்போம்.
துரையின் உத்தரவு தண்டோரா மூலம் கிராமங்கள் தோறும் பகிரங்கப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட நாளில் நாலா ஊர் ஆட்களும் கூடியிருக்க புலவர் இழுத்து வரப்பட்டார். பேயறைந்தவர் களைப் போல ஜனங்கள்கூட மௌனமாகக் கூடியிருந்தார்கள். வேலஷ் துரையும் துபாஷி கிட்டுப்பிள்ளையும் வந்து அமர்ந்தார்கள்.புறங்கை கட்டிய நிலையில் புலவர் மேஜரின் முன்னால் நிறுத்தப் பட்டார். எவ்வித பதட்டமோ படபடப்போ இன்றி இயல்பாக நின்றார் புலவர்.
புலவரே உம்முடைய இரண்டு கண்களையும் அப்புறப் படுத்தும்படி துரையின் உத்தரவு, நீர் வேறு ஏதாவது சொல்வதாக இருந்தால் சொல்லிக்கொள்ளலாம். ‘உங்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என் அப்பன் முருகன் கொடுத்த கண்ணையும், மன்னர் கட்டபொம்மன்
கொடுத்த கண்ணையும் உங்களால் பறிக்க முடியாது.’
புலவரே வீணாக அகங்காரம் பேசி கண்களை இழக்காதீரும், இனிமேல் கட்டபொம்மனைப் பற்றி புகழ்ந்து பாடல்கள் பாட மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்டுவிட்டு ஓடிப்போயிரும். ‘உங்களால் என் புறக்கண்களை வேண்டுமானால் பறிக்கலாம்,
அகக் கண்களை யாராலும் பறிக்க இயலாது’
‘கிட்பிள்ளாய் வாட்மீன் அகக்கண்’ அகக்கண் என்றால் என்னவென்று துபாஷி துரையவர்களுக்கு நீண்ட விளக்கமளித்தார். அதாவது புறக்கண்களுக்குத் தெரிவதை விடவும் அகக் கண்களுக்கு எல்லாமே நன்றாகத் தெரியும் என்று துபாஷி கிட்டுப்பிள்ளை விளக்கமளித்தார். தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்த துரை ஆச்சரியத்துடன் சொன்னார். பதட்டத்துடன் காணப்பட்டார். புலவருடைய இரு கண்களையும் மறைத்துக் கட்டும்படி உத்தர விட்டார். இரண்டு கண்களையும் மறைத்து கறுப்புத் துணியால் இறுக்கிக் கட்டினார்கள். உள்ளிருந்து ஒரு வாளை எடுத்து வந்து துரையின் கையில் கொடுத்தார்கள். துபாஷி கிட்டுப்பிள்ளை சத்தமாகக் கேட்டார்.
‘இப்போ துரையோட கையில என்ன இருக்கு?’
‘துரையோட கையில வாள் இருக்கு’ ‘என்னோட கையில என்ன இருக்கு?’ உம்மோட கையில உம்மோட தலத்துண்டு இருக்கு’
‘துரை இப்ப எங்கே இருக்கிறார்?’ ‘துரை இப்போ குதிரை மேல் இருக்கிறார்’
இது ஆண்குதிரையா பெண்குதிரையா?
‘பெண்குதிரை’
‘குதிரைக்குப் பக்கத்துல யார் இருக்கா?’
துரை குதிரையவிட்டு இறங்கி பக்கத்துல நிக்காரு.’ வேல்ஸ்துரை பதறிப் போனார். அவரால் என்ன செய்வதென்று முடிவு செய்ய முடியவில்லை. கண்கை கட்டிக்கொண்டு நிற்பவர் இங்கே நடப்பதை நேரில் பார்த்தபடியே பேசுகிறார். துபாஷிதான் பேசினார். துரையவர்களே இந்த மாதிரியானவர் களிடம் நாம் கடுமை காட்டக் கூடாது. அவர்கள் சித்து வேலை கற்றவர்கள்.
‘வாட் மீன் சித்துÕ
அதாவது சாதாரண மனிதர்களால் செய்ய முடியாதவற்றை செய்பவர்கள். கடவுளின் சக்தியைப் பெற்றவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள். மரணத்தை எண்ணி கவலையே படாதவர்கள். நம்மை நோக்கி சாபம் விட்டால் அது பலிக்கும். கை, கால்களைக் கூட முடக்கிவிடுவார்கள்.
கிட்டுப்பிள்ளை சொன்ன விளக்கத்தைக் கேட்டு துரை நடுநடுங்கிப் போய்விட்டார். புலவரை என்ன செய்வதென்று தெரியவில்லை. கண்களை நோண்டி எடுக்கும் நிகழ்ச்சியைப் பார்க்க ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். துரைக்குப் பெருத்த அவமானம். கிட்டுப்பிள்ளையிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார். மக்களின் முன் வேகமாக வந்த கிட்டுப்பிள்ளை துரையின் உத்தரவைச் சொன்னார்.
அதாவது புலவரைக் குதிரையில் ஏற்றி நம்முடைய ஆளுகைக்கு உட்பட்ட மாஞ்சோலை மலைக்காட்டில் போய் விட்டுவிட வேண்டும். பொதுமக்கள் யாரும் அவருடன் பேசவோ வேறு எந்த உதவிகளோ செய்யக் கூடாது. அப்படி யாராவது கண்டு பிடிக்கப்பட்டால், கடுமையான தண்டனை கிடைக்கும். இது துரையோட உத்தரவு.
இரு பக்கமும் இரண்டு குதிரை வீரர்கள் வர கந்தசாமிப் புலவர் குதிரையில் பயணப்பட்டார். குதிரைகள் சென்று மறையும் வரை பொதுமக்கள் பார்த்துக்கொண்டே நின்றார்கள். புலவர் சந்தோஷ மாக பாடிக்கொண்டே குதிரையில் அமர்ந்திருந்தார். மாஞ்சோலை என்பது அடர்ந்த காடுகளை உடைய மலையுச்சி. அங்கே ஏராளமான கரடிகளும் சிறுத்தைகளும் வசிக்கின்றன. மாஞ்சோலை எஸ்டேட்டின் மலையுச்சியில் கொண்டுபோய் புலவரை இறக்கிவிட்டு குதிரை வீரர்கள் மூன்று நாட்கள் கழித்து ஊர் திரும்பினார்கள். கடைசியில் புலவன் என்ன சொன்னான் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டவராய் மேஜர் வேல்ஸ்துரை குதிரை வீரர்களிடம் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
எஸ்டேட் போய்ச் சேரும்வரை எதுவுமே பேசவில்லை யென்றும்,மலையுச்சியில் ஏறும்போது மட்டும் கண்ணில் கண்ட மரங்கள், செடிகள், பூக்கள் எல்லாவற்றையும் கும்பிட்டதாகவும், மிகவும் சந்தோஷமாக இருந்ததாகவும் சொன்னார்கள். குதிரை யிலிருந்து இறக்கி பாரஸ்ட் அதிகாரிகளிடம் ஒப்படைத்தபோது இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசியதாகச் சொல்லி அந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்.
ஊமையன் கருவறுப்பான்’
ஊமையன் உன் இனமழிப்பான்’
இந்த வார்த்தைகளைத்தான் ஓயாமல் மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். மேஜர் வேல்ஸ்துரைக்கு இதற்கான அர்த்தம் தெரியவில்லை. துபாஷி கிட்டுப்பிள்ளையிடம் விளக்கம் கேட்டார். கிட்டுப்பிள்ளை மிகவும் விளக்கமாக பதில் சொன்னார். கிட்டுப்பிள்ளையின் பதிலைக் கேட்டு துரை பலமாகச் சிரித்தார்.
‘முட்டாள் புலவன், ஊமையன் பாளையங்கோட்டை ஜெயிலுக்குள் அடைபட்டுக் கிடக்கிறான், எந்த நேரத்திலும் தூக்கில் போடுவோம். உன்னை இன்று இரவே புலிகளும், செந்நாய்களும் இரையாக்கிவிடும், அப்புறம் உன் சாபம் பலிப்பது எப்படி என்று பார்க்கிறேன்.’
ஆனாலும் துரைக்கு புலவன் சொன்னது கிலியை ஏற்படுத்தி யிருக்கிறது என்பதை முகம் காட்டியது.
‘கிட் பிள்ளாய்… இது மாதிரி புலவர்களை வேறு யாரையாவது நீ பார்த்ததுண்டா
நிறையப் பேர்கள் இருக்கிறார்கள் துரையவர்களே, அவர்களை மக்கள் துன்புறுத்தமாட்டார்கள். வணங்குவார்கள். பெரும்பாலும் காட்டிலே வசிப்பார்கள்எ ன அவர் கூறுவது போலவே காட்சிகளை அந்த நாவலில் படைத்து இருக்கிறார் சோ. தர்மன்.
அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு மீண்டும் நாம்தாமிரபரணி கரையில் பயணிப்போம்.
( நதி வற்றாமல் ஓடும்)


