வ.உ. சிதம்பரனாரும். சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டதை அறிந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தைத் தடுப்பதாகக் கூறிய சப்கலெக்டர் ஆஷ்துரையின் ஆணவப் போக்கால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் மாண்டனர். அதில் இருவர் குழந்தைகள். குற்றால அருவியில் இந்தியர்கள் குளிக்கத்தடை. இப்படி ஆங்கிலேயரின் சர்வாதிகாரப் போக்குகள் பாரதமாதா சங்க உறுப்பினர்களான இளைஞர்களுக்கு மிகுந்த வெறுப்பையும் கோபத்தையும் உருவாக்கியது.
பழிக்குப் பழி இரத்தத்திற்கு இரத்தம் என பழிவாங்கத் திட்டமிட்டனர். நீலகண்ட பிரம்மச்சாரியின் பாரதமாதா சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த இளைஞர்கள் மேற்கொண்டிருந்த உறுதிமொழி அவர்களது தேசப்பற்றைக் காட்டுகிறது.
வீடு வாசல் உறவுகளை விட்டுவிட வேண்டும் எந்த நிலையிலும் வெளி ஆட்களுக்கு சங்கத்தின் நடவடிக்கைகளை தெரிவிக்கக் கூடாது. ரகசியங்களைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் தேவைப்பட்டால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். காட்டிக் கொடுப்பவர்கள் கொல்லப்படுவார்கள்.
மேற்கண்ட உறுதி மொழியைக் கூறி கட்டை விரலைக் கீறி இரத்தக் கையெழுத்திட வேண்டும். இத்தகைய மன உறுதி கொண்ட வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக் கொல்ல தேர்வு ஆனார்.
வ.உ.சிதம்பரனாரை சிறைக்கு அனுப்பிய ஆஷ்துரை கொடைக்கானல் செல்லுவதற்காக தன்னுடைய மனைவியுடன் பயணம் செய்யும் போது. தூத்துக்குடி அருகே உள்ள மணியாச்சி இரயில்
நிலையத்தில் 1911 மே17ஆம் தேதி சுட்டுக் கொன்றார். ஆங்கிலேயரின் கையில் பிடிபடக் கூடாது என்பதற்காக தம்மைத் தாமே சுட்டுக் கொண்டு வீரமரணம் எய்தினார் வாஞ்சிநாதன்.
சப்கலெக்டர் ஆஷ் துரையின் கொலைச் செய்தி கேட்டு அலறினர் ஆங்கிலேயர். விடுதலைப் பேராட்ட வீரர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்.
அடக்குமுறையை அரங்கேற்றியது காவல்துறை நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவரையும் கைது செய்தது. தேசபக்தர்களை காட்டிக் கொடுக்கும் கும்பல் தன்னுடைய கைகாட்டி வேலையைச் செய்தனர். போலீசின் குண்டாந்தடி தாக்குதலும் நிகழ்த்தப்பட்டது. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு செய்திகளை வெளியிட்டு வந்த பத்திரிகை அலுவலகங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன
வாஞ்சிநாதனுக்கு பின்னணியில் மிகப்பெரிய இளைஞர் படை உள்ளதோ? என்ற அச்ச வினாவுடன் வழக்கு புனையப்பட்டது. அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. திருநெல்வேலி சதி வழக்கு என்று அனைவராலும் பேசப்பட்டது.
வ.வே.சு ஐயர். மகாகவி பாரதியார் மற்றும் பல வீரர்களை கைது செய்து இவ்வழக்கோடு கோர்த்து விட போலீசார் கடும் முயற்சி செய்தனர். தலைமறைவாக இருந்த இவர்களைப் பிடிக்கும் எண்ணம் ஆங்கிலேயருக்கு நடக்க வில்லை.
தஞ்சாவூர் நீலகண்ட பிரம்மச்சாரி. கடையநல்லூர் சங்கரகிருஷ்ண ஐயர். தென்காசி சிதம்பரம் பிள்ளை. முத்து கிருஷ்ணசாமி பிள்ளை. தூத்துக்குடி சுப்பையா பிள்ளை. செங்கோட்டை ஜெகநாத ஐயங்கார். ஹரிஹர ஐயர். புனலூர் ராமசாமி பிள்ளை. வி.தேசிகாச்சாரி. வேம்பு ஐயர் என்ற மகாதேவ ஐயர். சாவடி அருணாசலம் பிள்ளை. அழகப்ப பிள்ளை. எட்டையாபுரம் வந்தேமாதரம் சுப்பிரமணிய பிள்ளை ஆகிய 14 வீரர்கள் வழக்கில் சேர்ப்பு. வ.உ.சிதம்பரனாரின் வலது கையாக விளங்கிய ஓட்டப்பிடாரம் மாடசாமி போலீஸ் கையில் பிடிபடாமல் பாண்டிச்சேரிக்குத் தப்பினார். மாடசாமி யின் சொத்துக்களை பறிமுதல் செய்தனர் ஆங்கிலேயர்.
ஆங்கிலேயரின் கைது நடவடிக்கையின் போது. போலீசின் கையில் பிடிபடக் கூடாது என்பதற்காக செங்கோட்டை தர்மராஜ ஐயரும். புனலூர் வெங்கடேச ஐயரும் தற்கொலை செய்து கொண்டதால் வழக்கில் சேர்க்கப்படவில்லை ஒன்பது வீரர்களுக்குச் சிறைத்தண்டனையும் ஐந்து வீரர்களுக்கு விடுதலையையும் நீதிமன்றம் வழங்கியது.
தாய்நாட்டின் விடுதலை வேள்வியில் தன் உயிரை அர்ப்பணித்த வீரவாஞ்சிநாதனுக்கு நினைவு மண்டபம் எழுப்பிட 1957 ஆகஸ்ட் 8 இல் செங்கோட்டை நகராட்சி முத்துசாமி பூங்காவில் அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர்கு.காமராஜர் அடிக்கல் நாட்டினார்.
1986 ஜூன் 17இல் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன் வீரவாஞ்சி நாதனுக்கு முழு உருவச் சிலையை செங்கோட்டையில் திறந்து வைத்தார்.
பெருந்தலைவர் கு.காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் நினைவு மண்டபத்தை கட்டுவித்து முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவே அதனை திறந்தும் வைத்தார்.
மத்திய அரசு வீரவாஞ்சிநாதனுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தூத்துக்குடி வட்டத்தில் உள்ள மணியாச்சி இரயில்வே நிலையத்திற்கு வீரவாஞ்சி மணியாச்சி என்று பெயரிட்டு அவரது நினைவைப் போற்றி வருகிறது.


